நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
15.05.2025
20. பரிதாப அன்பைவிட, நிலைத்திருக்கும் தேவ அன்பு மேலானது!
வியாபார விஷயமாய் என் கணவரோடு ‘லாங்கு வில்லா’ விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்தேன். விடுதியில் ஏற்பட்ட ஜுரம் எனக்கு வருத்தத்தையும் வியாதியையும் கொண்டு வந்தது. ஆகவே, அருகில் உள்ள வேறு ஒரு தனி பெரிய வீட்டிற்கு என் கணவருடன் மாறிச் சென்றேன். சில நாட்களாய் வைத்தியம் செய்த மருத்துவர்கள் “இனி நான், அதிக நாட்கள் பிழைத்திருக்க முடியாது” எனக் கூறி கைவிட்டார்கள்! மரணத்தை எதிர்நோக்கியிருந்த என்னை சந்தித்து இறுதி ஜெபம் செய்திட பாதிரியாரும் வந்துவிட்டார். மரண சமயத்தில் கடைசியாய் தரும் ‘திருவிருந்தை’யும் எனக்கு கொடுத்தார். என்னைச் சூழவந்த, உறவினர்களும் நண்பர்களும், எதிர்பாராத என் மரணப்படுக்கை கண்டு மனம் கலங்கிப் போனார்கள். ஆனால், எனக்கோ சிறிதளவும் மனக் கலக்கமும் ஏற்படவில்லை. ஆண்டவரை நேசித்து வாழும் யாவருக்கும் மரணத்திற்கு அஞ்சாத இந்த நல்ல பங்கு உண்டு என்றே நான் விசுவாசிக்கிறேன். இனி நான் உயிர்வாழ்வதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை, என்பதை அறிந்த என் கணவர் வெகுவாய் கண்ணீர் விட்டு துடித்துப் போனார்! ஒருவரால் கூட அவரை ஆறுதல் செய்ய முடியவில்லை!!
ஆனால்.... நானோ, தேவனுடைய அதிசயமான அன்பின் தொடுதல் எனக்கு ஏற்பட்டு பூரண சுகம் பெற்றேன்! இப்போது நடந்தது என்ன தெரியுமா? நான் முற்றிலும் சுகம் அடைந்ததைக் கண்ட என் கணவர், என் மரணதருவாயில் காட்டிய அன்பிற்கு முற்றுபுள்ளி வைத்து, மீண்டும் விசனப்படுத்தும் நிலைக்கு சென்றுவிட்டார்!! ஆகிலும், நான் உயிர்பிழைத்த அனுபவம், தேவன் என்மீது கொண்ட அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் உறுதியான நிரூபணமாயிருந்தது!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)