கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
05.05.2025
மோட்சமா? நரகமா? தெரிந்துகொள்ளும் காலம், மிக குறுகியது!
மோட்சம் என்பது எத்தனை உண்மையானதோ அதேபோன்று நரகமும் உண்மையானதே! நரகத்தை நோக்கித் தீவிரிக்கும் மனுஷரை நமக்குள்ள முழு சக்தியோடும் தடுத்து, நித்திய ஜீவனுக்குள் கொண்டு வருவது நமது தலையாய கடமை யாகும். மத்தேயு 25:46-ல் கிறிஸ்து இரட்சகர் மிகவும் திட்ட வட்டமான வார்த்தைகளில் “அந்தப்படி இவர்கள் 1) நித்திய ஆக்கினையை அடையவும், 2) நீதிமான் களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.....” என்று குறிப்பிட்டுள்ளார். நம்மனைவரின் பூவுலகக் கால அளவுகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. நமது ஆயுட்காலம் மிகவும் குறுகியதே! மனந்திரும்பாத ஒவ்வொருவரையும் கர்த்தர் பார்த்து “மகனே, உனது காலம் பூமியில் மிகவும் குறுகியது. இயேசுவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு உன் பாவங்களிலிருந்து மனந்திரும்பு. தேவனோடு ஒப்புரவாகிக்கொள். சற்று நின்றே யோசித்துப் பார். பூவுலகத்தில் உனக்குகிடைத்த சொற்பமான ஆண்டு காலத்தை பாவத்தின் அற்ப இன்ப வழிகளில் செலவிட்டுவிட்டு ‘உன் முடிவில்லா நித்தியத்தை’ அக்கினிக் கடலான நரகிலா செலவிட விரும்புகின்றாய்” என்று எச்சரிக்கின்றார்.
அதுபோலவே, ‘தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கான’ நமது கால அளவும் மிகவும் குறுகியதே. கர்த்தராகிய இயேசு வெகு சீக்கிரம் வரப்போகின்றார். ஆகவே, நாம் அவருக்கென்று செய்வதை மிகவும் துரிதமாகவே செய்ய வேண்டும். நம்மால் முடிந்தவரை கிறிஸ்தவ இளைஞர்களை ஆண்டவருடைய சேவைக்கென்று தங்களை ஒப்புவித்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு ஆண்டவரைப் பின்பற்றத் தூண்டுதல் வேண்டும்!
“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” என்ற தேவ வசனத்தின் “பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” என்ற பதத்தின் (சுநனநநஅ) மூலக்கருத்து “விலை கொடுத்து மீட்டுக் கொள்ளுங்கள்” என்பதாகும்.
தேவன் காலத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் காலத்தைத் தமக்கென்று உண்டாக்காமல் மனுஷனுக்கென்று உண்டுபண்ணினார். தேவனுக்குத் துவக்கமும், முடிவுமில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கூட நம்முடன் நித்தியத்தில் ஜீவிப்பார். எனவேதான் அவர் நமக்கு நித்திய ஜீவனை அளித்திருக்கின்றார். அவருடன் சம்பந்தப்பட்டக் காரியங்கள் அனைத்தும் அநித்தியமானதல்ல, நித்தியமானதே!
வாலிபனே, அநித்தியமான காரியங்களிலிருந்து உனது கண்களை விலக்கி, முடிவில்லா நித்தியத்திற்கு உனது கண்களைத் திருப்புதல் எத்தனை ஞானமானது! இன்று நீ எடுக்கும் தீர்மானமே, உன் நித்திய பங்கை உனக்கு நிர்ணயிக்கும் என்பதை அறிவாயாக!
- வாலிபம் இயேசுவுக்கே