நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
21.11.2024
47. கிறிஸ்துவின் ஜீவியம் அங்கு இல்லையோ? அதை ‘சபை’ என கூறலாகாது!
கிறிஸ்துவை ஜீவனாக ஏற்றுக்கொள்ளாததால், அனேகருடைய ஜீவியத்தில் மாறுதல் இல்லை. சகல சங்கடங்களுக்கும் குழப்பங்களுக்கும் பிரிவினைகளுக்கும் காரணமாய் இருப்பவர்கள் “இந்த கிறிஸ்துவின் ஜீவியம் அல்லது ஜீவன் இல்லாதவர்கள்தான்”. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலும்! அவர் மூலமாய் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளாமலும்! வாழ்ந்து கொண்டு, இவர்கள் எதற்காக சபையிலிருக்கிறார்கள்? இப்படிப்பட்டவர்கள் கூடிவருகிற சபைகள் வீணான சபைகளாகும். ‘இவர்கள் சபையாகக் கூடுவதை ஆண்டவர் சகிக்கமாட்டேன்’ என்றே கூறுகிறார்.
கிறிஸ்தவன் என்ற பெயரில் கிறிஸ்து அல்லாதவர்களாகவும், சபை என்ற பெயரில் பகை உணர்வு கொண்டவர்களாகவும்.... கிறிஸ்துவுக்கு அங்கே இடமில்லை என்ற நிலையில்! சகலமும் வீணாகும்.
இதுபோன்றவர்களின் கூட்டம் வெற்றுக் கூட்டம் அல்லவா? இவர்களுக்கு சபை என பெயர் சூட்டுவதும் அலங்கோலமல்லவா? சிறு குடிசை ஆலயமானாலும் அங்கே ஆராதிக்கும் ஏழைகள் கிறிஸ்துவின் சீஷர்களாகவும், அவர்களை நடத்தும் போதகர்கள் உத்தம அடியார்களாயும் இருப்பார்களானால், அந்த சபை ஒரு சிறிய மோட்சம் போலிருக்கும்! ஆ, அதுவே கிறிஸ்துவின் சபை!
- ரத்னம்