கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
மானிடனாகப் பிறந்து, பூலோக நாடக மேடையில் மாயாஜாலங்கள் புரிந்த மண்ணான மனிதன் நாசியின் சுவாசம் போய், செத்த சவமாகி விட்டான். அவன் இந்த உலகத்திலே போட்ட ஆட்டமும், சாட்டமும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அவனுடைய காரியங்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி விழுந்து விட்டது. செத்த சவமாகிய அவனது அருகில் அவனின் மனையாளும், மக்களும் அமர்ந்து அழுது புலம்புகின்றனர்.
உலகத்தில் அந்த மனிதன் வாழ்ந்த காலத்தில், மக்களுக்கு முன்பாக எத்தனையோ ஜம்பங்கள் பேசி மார் தட்டி நின்றவனை, இப்பொழுது நாலுபேராக சுடுகாட்டிற்கு தூக்கிச் சுமந்து பிடி சாம்பலாக்குவதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். அங்கே சுடுகாடு தெரிகின்றது. கட்டின மனைவி தன் தாலியை அறுப்பதற்காக சுடுகாட்டில் ஆயத்தமாக அமர்ந்திருக்கின்றாள். அகிலத்தை எல்லாம் ஆளுவேன் என்று ஓர் நாள் மெத்தப்பேசிய, அறிவற்ற பேதை மாந்தன் இன்று பிடி சாம்பலாகப் போகின்றான். அந்த பிடி சாம்பலாவது இறுதியில் மீதியாகுமா? அதுவும்தான் கிடையாது! அதோ சுடுகாட்டிற்கு நடுவாக ஓடும் ஆற்றின் நீர், அதையும்தான் எடுத்து விழுங்கி மண்ணில் போட்டுவிட்டு சென்றுவிடும்.
இரயில் நிலையத்தில் ஏதேனும் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து “இரயில் இன்னும் வரவில்லையா?” என்று கேட்கும்போது மற்றவர் அவரைப்பார்த்து கைகாட்டி இறங்கிவிட்டது “லைன் கிளியர்” என்று கூறுவதை நாம் கேட்கலாம். அதின் அர்த்தம் என்னவெனில் “இரயில் நிச்சயமாக இரயில் நிலையத்தை விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கின்றது..... சற்று நேரத்திற்கெல்லாம் அது வந்து சேர்ந்துவிடும்” என்பதுதான்.
வாழ்க்கை பயணம், இந்த ரயில் வண்டிபோல் “கை காட்டி இறங்கியவுடன்” அடுத்த ஸ்டேஷனில் நின்று விடுவதாகவே அனைவருக்கும் உள்ளது! வண்டி நிற்பதற்கு முன்பாகவே, தன் ஜீவியத்தில் மனந்திரும்பி நித்தியம் சேர்வதே வாழ்வின் இலட்சியம்!
ஓ வாலிபனே, கை காட்டி இறங்கும் நேரம் யாருக்கும், எப்போதும் நேரலாம்! துரிதமாய், உன் இரட்சகரை அண்டிவந்து, பரம இலக்கை வந்து அடைவாயாக!