கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஒரு நாள் நள்ளிரவு ஒரு மணி இருக்கும். ஊழியத்தின் மிகுந்த களைப்போடு நான் எனது படுக்கைக்கு செல்ல ஆயத்தமானேன். அந்த சமயம் “எழுந்து வெளியே செல்” என்ற ஒரு வார்த்தை தொனிப்பதை நான் கவனித்தேன். அப்பொழுது “நான் மிகவும் களைப்பாக இருக்கின்றேன். எனது கால்கள் இரண்டும் நோவு எடுக்கிறது, எனக்குள்ளாக நித்திரை மயக்கமாகவும் இருக்கின்றேன்” என்று பதில் கூறினேன். ஆனால், திரும்பவும் அந்தக் குரல் “எழுந்து வெளியே செல்” என்று தொனித்தது. உடனே நான் கீழ்ப்படிந்து, எனது மேல் கோட்டைப் போட்டுக்கொண்டு கராச்சி பட்டணத்தில் வாழும் பற்பல மொழி பேசும் மக்களுக்கு தேவையான பற்பல மொழிகளில் எழுதப்பட்ட சுவிசேஷ துண்டுப்பிரதிகளை எனது கோட்டுப் பைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டு பட்டணத்துக்குள் கிளம்பினேன்.
நான் சற்று நேரம் பட்டணத்தின் வீதியில் சென்று கொண்டிருக்கையில் அந்த நள்ளிரவு நேரம், எனக்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். நான் அவர்களைக் கூப்பிட்டு “தயவு செய்து நில்லுங்கள். நான் உங்களிடம் சொல்ல வேண்டிய ஒரு காரியம் உள்ளது” என்று சொன்னேன். அவர்கள் நின்றதும், நான் அவர்கள் அருகில் சென்று நான் படுப்பதற்காக சற்று நேரத்திற்கு முன் “நான் வெளியே போகும்படியாக என்னிடம் பேசுகிற கடவுளுடைய குரலைக் கேட்டேன். உங்களை சந்திக்கும்படியாகவே கடவுள் என்னை அனுப்பி இருக்கின்றார்” என்று கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் “ஆ, அது உண்மைதான், கடவுள் உங்களை எங்களிடம் அனுப்பி உள்ளார் என்பதை நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில், நிம்மதி இல்லாது படுக்கையிலிருந்த எங்களை இந்த வீதியில் நடந்து செல்லச் செய்ததும், இறைவன் செயலே! நீங்கள் சொல்ல விரும்பிய “கடவுளுடைய செய்தியை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்! உடனே, நான் எனது வேதாகமத்தை திறந்து சில வேத பகுதிகளை அவர்களுக்கு வாசித்துக் காண்பித்த பின்னர், எனது மனந்திரும்புதலின் சரித்திரத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த வாலிபர்களில் ஒருவனான குல்கர்னி என்பவன் “கடவுள் உங்களை எனக்காகவே அனுப்பி இருக்கின்றார்” என்று கூறி, ஒரு வேதப்புத்தகத்தையும் என்னிடமிருந்து விலைகொடுத்து வாங்கிச் சென்றான். அத்துடன் கர்த்தராகிய இயேசு இரட்சகரையும் முழு மனதோடு அந்த நள்ளிரவில் விசுவாசித்து இரட்சிக்கப்பட்டான்!