கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.05.2026
வாலிபனே, லோக சிற்றின்பத்திற்காக நித்திய பேரின்பம் இழப்பாயோ?
அழிந்து போகும் உலக வாழ்விற்கு, கண்விழிப்புகளும், பாடுகளும், பிரயாசங்களும், போராட்டங்களும், அலைச்சல்களும் தேவையானால் ஆண்டவர் இயேசுவோடு நித்திய, நித்திய காலமாக, யுகா யுகங்களாக வாழ நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள எத்தனையாக நாம் விழிப்புடன் பிரயாசப்பட வேண்டும்! இந்த கடுமையான பிரயாசங்களில், திருப்போரில் அநேகர் தேர்ச்சி பெற மாட்டார்கள் என்பதை அறிந்துதான், அருமை இரட்சகர் வெகு திட்டவட்டமாக “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத் 7:14) என்று கூறி வைத்துவிட்டார். மெய்தான் ‘அநேக கிறிஸ்தவர்கள்’ தேவனுடைய பரம இளைப்பாறுதலைக் கண்டு கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஒரு சபையின் பாஸ்டர் என்னை சந்தித்தபோது “சகோதரனே, சபைகளில் மோட்சம் செல்லும் எண்ணிக்கை 100க்கு 10கூட நிச்சயமாக தேறாது” என்றார்கள். அந்த எண்ணிக்கை இன்னும் கணிசமாக குறைந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், மோட்சம் செல்ல நாம் அளிக்க வேண்டிய ‘விலைக்கிரயம்’ மிகவும் பெரியது. ஆகவேதான், ஜீவவழியைப் புறக்கணித்து, எளிய பாவஇன்ப வழியை நலமென நாடும் மாந்தர்களே இன்று அநேகம் உள்ளார்கள்!
பரலோக பாக்கியம் அடைந்திட மனம் திரும்ப வேண்டும்! மீண்டும் மன்னிக்கப்பட்ட பாவத்தில் ஜீவிக்கக்கூடாது! இனி வரும் நாட்களில் பாவம் செய்திடாமல், பரிசுத்தமாய் வாழ்ந்திட வேண்டும்! இதுபோன்ற உயர்ந்த தெய்வ பண்புகளை நாடிச் செல்வதற்குப் பதிலாய், அநித்தியமான தற்காலிகமான பாவ இன்பங்களை மேன்மையாக நாடி, நித்திய பேரின்பத்தை இழக்கத்துணிவது சரிதானா? ஓ, வாலிபனே, உன் அற்பகால வாழ்க்கையைவிட நித்திய வாழ்வின் மேன்மையை உணர்ந்து, உன் அன்பு இரட்சகர் இயேசுவிடம் உன் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பாயாக!
- வாலிபம் இயேசுவுக்கே
