கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.06.2025
ஓ வாலிபனே, கிறிஸ்துவுக்குள் கனிகொடுத்து வாழ்வாயாக!
ஓ கிறிஸ்தவ வாலிபனே! நீ ஒரு கனிதரும் செடியாக இருக்க வேண்டும் என்றே தேவன் விரும்புகின்றார். வாலிபனே, உனது மெய்யான சந்தோஷமானது நீ வாழும் மாயையான பாவ பழக்கத்தில் இல்லை! ‘மது, மாது’ என எத்தனை வாலிபர்கள் சீரழிந்தார்கள்! இன்னும் அனேகர் பணம், மதிப்பு, கௌரவம் என தேடி ‘நாகரீக வழியில்’ சீரழிகிறார்கள்! இவைகள் அல்ல, இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாய் மாய்ந்து அழிந்துவிடும். எக்காலத்திலும் மாறாத சந்தோஷம் ‘உன் சிருஷ்டி கர்த்தாவிடம் மாத்திரமே’ உண்டு! இரட்சகராய் இவ்வுலகத்திற்கு வந்த ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து, உன் பாவ சேற்றிலிருந்து இரட்சிக்கப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளையாய் மாறுவதேயாகும்! மேலும், தேவ சமூகப் பிரசன்னத்தின் ஒளியில் நீ தொடர்ந்து வாழ்ந்து, நிறைவான கனிகொடுப்பதையே தேவன் விரும்புகிறார்!
தேவனுடைய விருப்பத்தின்படி வாழ்ந்திட, வேதவாசிப்பும், தனிஜெப வாழ்க்கையும் கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்கக்கூடிய அடிப்படை ஆதாரங்களாய் இருக்கிறது! இன்னும் வலுமிக்க ஆதாரம் என்னவெனில், தேவ சமூகத்தின் பரிசுத்த பிரசன்னத்தைத் தொடர்ச்சியாக உணர்ந்து வாழும் பரிசுத்தாவியின் அபிஷேக வாழ்க்கையாகும்!
வாலிபனே, கிறிஸ்துவின் பிரசன்னத்தை இரவும், பகலும் நீ அப்பியாசிக்கப் பழகிக்கொள்ளுதல் உனக்கு எத்தனை அவசியமானது என்று நீ மதிக்கின்றாய்? நமக்களிக்கப்பட்டப் பரிசுத்த ஆவியானவரை, நமது பாவத்தின் மூலமாக நாம் துக்கப்படுத்தாதிருக்கும்படியாகவும், நமது மூர்க்க குணத்தின் மூலமாகப் பரிசுத்த ஆவியை நாம் அவித்துப்போடாதிருக்கும்படியாகவும், தேவ சமூகப் பிரசன்னத்தை நாம் அப்பியாசித்தல் மிகவும் அவசியமாகும்!
இவ்வாறு நிரந்தரமாய், நித்தியத்திற்குரிய கனியுள்ள வாழ்க்கை வாழ்ந்திடவே, நீயும் அழைக்கப்பட்டிருக்கிறாய் என உணர்ந்து வாழவே, கர்த்தர் உன்னை அழைக்கிறார்!
- வாலிபம் இயேசுவுக்கே
