கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

20.01.2026
குப்பை செடியை “உலகத்தின் ஒளி” மணக்கச் செய்துவிடும்!
அசுத்தங்கள் நிறைந்த ஓர் இடத்தை நான் பார்த்தேன். கெட்டுப்போன பலதரப்பட்ட பொருட்கள் அங்கே கொட்டப்பட்டிருந்தன! அருவருப்பான கிருமிகள் அதன்மீது மேய்ந்து கொண்டிருந்தன! அங்கு துர்நாற்றம் வீசியது. ஆனால் நல்ல மணமுள்ள அழகுப் பூக்கள் அங்கு வளர்வதையும் கண்டேன். அந்த கொடிய துர்நாற்றத்தை அந்தப் பூக்களின் நறுமணம் மாற்றி விட்டதைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்!
பொதுவாக, துர்நாற்றம் இந்நறுமண மலர்களின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தும் என்று சில தாவரவியல் நிபுணர்கள் கூறுவதுண்டு!
அவர்களின் கணிப்பிற்கு மாறாக, அம்மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கி, நன்கு வளர்வதற்கு காரணம் என்னவாய் இருக்கக்கூடும்?
அவைகள் சூரியனுக்கு நேராயிருக்கும்போது, அதன் கதிரும், ஒளியும், செடியின் மேற்பட்டு, ‘சூரியகாந்தம்’ மலர்ச் செடிகளுக்கு கேடு செய்யும் பல கிருமிகளையும், புழுக்களையும் அழித்து, நறுமண மலர்ச் செடியின் வளர்ச்சிக்கு வழி உருவாக்கியதைக் காண்கிறேன்.
அதுபோலவே, பாவ அழுக்குப் படிந்த இவ்வுலகில் வாழும் ஒருவன், ஜெபத்தாலும், வேண்டுதலாலும் இருதயத்தைக் கடவுளுக்கு நேராக பரத்தை நோக்கித் திருப்பும்போது இறைவனிடமிருந்து வெளிச்சமும், ஆவிக்குரிய அனலும் பெற்று, கெட்ட உலகத்தின் துர்நாற்றத்தினின்று விடுதலை அடைந்து, ‘உலகின் ஒளியாகிய’ கிறிஸ்துவின் புதுவாழ்வு வாழ்வது சாத்தியமாகிறது!
ஓ, வாலிபனே உன் ‘துர் நாற்றம்’ நிறைந்த பாவ வாழ்க்கையை ‘உலகத்தின் ஒளியாகிய’ ஆண்டவர் இயேசு ஒருவரே, மன்னித்து, பாவத்தை ஒழித்து அழித்திட வலிமை கொண்டவர்! இந்த அன்புள்ள இரட்சக பெருமானை நோக்கி, உன் ‘இளம் செடி’ வளர்ந்துவிட்டால், உன் வாழ்வில் ‘துர்நாற்றம் நீங்கி’ நறுமணம் தோன்றுவது அதி நிச்சயம்! அது, நித்தியத்திற்கும் நிலைத்து நிற்கும் நறுமணம்!
- வாலிபம் இயேசுவுக்கே
