கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

02.12.2025
ஓ, வாலிபனே! “நித்திய ஒளிபெற்று” வாழ்வதே உன் மேன்மை!
இமாச்சல பிரதேசத்தில் “கொட்கார்” என்ற ஸ்தலத்தில் திடீரென்று மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்பட்டது! ‘நம் சாது வந்து விட்டார்.... நம் சாது வந்து விட்டார்!’ என்ற ஆரவாரம் காட்டுத் தீ போல் கொட்கார் ஸ்தலம் முழுவதும் பரவியது. இந்தச் செய்தி கேள்விப்பட்ட ஒரு கும்பல் ஆனந்த கூத்தாடி, கண்ணீர் வடித்தார்கள்! சாது சுந்தர்சிங் தங்கி இருந்த குகையை நோக்கி ஓடியவர்களில், கால் நொண்டி நொண்டி நடந்து சென்ற பெண் பிள்ளைகளும், பரட்டை தலையோடு மகிழ்ச்சியுடன் ஓடிய பையன்களும், கூட்டமாய் சென்ற குஷ்டரோகிகளும் அடங்குவர்! தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களும் ஆனந்தமாய் அவரைத் தேடி ஓடினார்கள். “எங்களுக்காக அல்லவோ சாது திரும்பி விட்டார்” என்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு, ஏதோ நித்திய கன்மலையை கண்டதுபோல் ஓடினார்கள்!
விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சாது சுந்தர்சிங் அவர்களை சந்தித்த காலத்தில், அங்கிருந்த அனைவருமே மனம் திரும்பி இரட்சகரின் ஒளியை கண்டடைந்தார்கள். அவர் சந்தித்த சிறு பிள்ளைகள் எத்தனை பேரோ, அத்தனை பேர்களுடைய இருதயத்திலும் இயேசுவின் ஜீவனை சாதுசுந்தர்சிங் விதைத்தார்!
அந்நாட்களில், சாது அவர்களுக்கு C.F.ஆண்ட்ரூஸ் என்ற நெருங்கிய நண்பர் இருந்தார். அவர் சாது சுந்தர்சிங்கைப் பற்றிக் கூறும்போது: “சுந்தர்சிங் இமாச்சல் பட்டணத்தில் இருக்கும்போது, தன்னுடைய உபரி நேரத்தை பள்ளி வாலிப பையன்களோடு அதிகமாய் செலவழித்தார். இரவில் நீண்ட நேரமாய் இந்த வாலிப பையன்கள், கொட்காரில் அவர் தங்கி இருந்த குகைக்கு முன்பாக அமர்ந்து, சாது சுந்தர்சிங்கின் பிரகாசிக்கும் முகத்தை ‘கண் இமைக்காமல்’ உற்று நோக்கி, அவர் கூறுவதை பேரார்வத்துடன் கேட்பார்கள். அவருக்குள் இருந்த விசுவாச தைரியமும், துணிச்சலும் இந்த இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது!” எனக் கூறினார்.
அன்பான வாலிபனே, ‘நித்திய ஜீவிய ஒளியோடு’ வாழ்வதே அர்த்தமுள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை! ஏனெனில், அதுவே உன்னையும் பிரகாசிக்கும்! உன்னைச் சுற்றியுள்ள மற்ற வாலிபர்களையும் பிரகாசிக்கச் செய்திடும்!
- வாலிபம் இயேசுவுக்கே
