கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
09.10.2024
‘ஒரு பாவி’ இரட்சிக்கப்படாமல், நல்லவனாய் மாறிட இயலாது!
‘நற்செயல்களால்’ இரட்சிப்படையலாம் என்பது சாத்தானின் சுவிசேஷம்! இது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு மாறானது, முற்றிலும் விரோதமானது! ‘மனிதனுடைய நற்குணத்தின்’ தகுதியைப் பார்த்து தேவன் அவனை ஏற்றுக்கொள்ளுகிறார் என்றே இந்த உபதேசம் நம்பச் செய்கிறது. “நல்லவனாக இரு, நல்லதையே செய்” என்பது சாத்தானின் தந்திர உபதேசத்தின் அழுத்தமான வலியுறுத்தல்! பாவத்தால் சீர்கெட்டுப்போன மனித சுபாவத்தில் நலமானது எதுவும் இல்லை என்பதை இந்தப் போதனை ஒப்புக்கொள்ளுவ தில்லை. இரட்சிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முக்கியப்படுத்தாமல், இரட்சிப்பினால் உண்டாகும் குணத்தைப் பற்றியே அது பேசுகிறது. இரட்சிப்பின் அனுபவம் இருந்தால்தான், இரட்சிப்பின் நற்குணசீலங்கள் உருவாகும் என்ற உண்மையை இப்படிப்பட்ட மாயமான போதனைகள் சொல்லுவதில்லை. ஓ வாலிபனே, ‘நான் நல்லவனாகவே இருக்கிறேன்’ என்ற நிலையிலிருந்து “நான் பாவி, என்னை இரட்சியும் இயேசுவே!” என்பதைத் தவிர நீ இரட்சிக்கப்பட வேறு வழி ஏதும் இல்லை என அறிவாயாக!
இந்த உலகத்தை வசதியான, மனதுக்குப் பிடித்த ஒரு மனோகர வாழுமிடமாக மாற்றி, கிறிஸ்து இல்லாவிட்டாலும் குறை எதுவும் இல்லை என்றும், தேவனைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனிதரை எண்ணச் செய்வது பிசாசின் நோக்கம். மனிதனை இந்த உலகத்தைப் பற்றியே அதிகமாகச் சிந்திக்கச் செய்து, வரும் உலகத்தைப் பற்றி நினைக்க நேரமோ, விருப்பமோ இல்லாதபடி செய்துவிட ‘மானிடர்களுக்கு நல்லதே செய்வோம்’ என்ற கொள்கை பெரு முயற்சி செய்கிறது. தாராள மனப்பான்மை, சமுதாய சேவை, அன்புச் செயல்கள் ஆகியவற்றை இந்த கொள்கை வஞ்சகமாய் பயன் படுத்துகிறது! பிறருடைய நன்மைக்காக வாழ வேண்டும், எல்லாரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றுகூட போதிக்கிறது. இப்படிப்பட்ட போதனைகளை மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில், மனிதன் சுபாவத்தின்படி பாவத்தில் விழுந்த நிலைமையில் இருக்கிறவன், தேவனுடைய ஜீவனுக்கு அந்நியன், அக்கிரமங் களிலும், பாவங்களிலும் மரித்தவன். ஆகவே, மறுபடியும் பிறப்பதில்தான் அவனுடைய ஒரே நம்பிக்கை உள்ளது என்ற உண்மைகளை இந்தப் போதனை புறக்கணிக்கச் செய்கின்றது. ‘நீயோ நல்லவனாக இரு’ என்ற போதனை இன்று கவர்ச்சி நிறைந்ததாய் மாறி, அனேக குருஜிக்களை தோன்றச் செய்துவிட்டது! வாலிபனே, உன்னை கேடான பாவியாக உணர்ந்து, இரட்சகரிடம் வா! அவர்களையே கர்த்தர் ஏற்று, இரட்சிக்கிறார், வாழ்வு தருகிறார்!
- வாலிபம் இயேசுவுக்கே