கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
17.12.2024
வாழ்க்கை மிகச் சிறியது.... சீக்கிரத்தில் இரட்சிப்படைவதே நன்று!
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு யோவானாகவோ, அல்லது ஒரு யூதாஸாகவோ இருக்கலாம்! ஒரு பவுலாகவோ அல்லது ஒரு பிலாத்தாகவோ இருக்கலாம்! பயனுள்ள வாழ்க்கையோ அல்லது வீண் வாழ்க்கையோ நடத்தக் கூடும்! இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ பிறர்க்குக் கொடுக்கக் கூடும்! இவைகளை நாம் சிந்திக்கும்பொழுது, வாழ்க்கை என்பது நம்மிடம் நல்ல நம்பிக்கையோடு கொடுக்கப்பெற்ற புனித உடைமை என்றும், அதை வீணடிக்காமல் நல் வழியில் பயன்படுத்த வேண்டும் என்றும் உணர்கிறோம்!
அமெரிக்காவிலிருந்த குவேக்க கிறிஸ்தவர், ஸ்டீபன் கிரைல்லட் எழுதிய பின்வரும் குறிக்கோளை, இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் தமது மேஜையின் மேல் வைத்திருந்தார். “இந்த உலகத்தை நான் ஒரே ஒரு முறைதான் கடந்து செல்லுவேன்; ஆகையால் நான் பிறருக்குச் செய்யக்கூடிய நன்மையை ஒத்தி போடாமல் அல்லது அதைப்பற்றிக் கவலையற்றவனாய் இராமல், இன்றே செய்வேனாக! வாழ்க்கை ஒருவழிப் பாதையாக அல்லவோ இருக்கிறது. வழ்க்கையின் இந்த தன்மையை “ஒரு அச்சம் தரும் குறுகிய ஒரே வழிப் பாதை” என மிகவும் வலியுறுத்தி கூறினார்!
“ஒரே ஒரு வாழ்க்கை” என்னும் எச்சரிக்கை, என்றும் நம் செவிகளில் தொனிக்கட்டும். அது, நம் வாழ்க்கையை சீர்திருத்தட்டும். இதை உணரும்போது, இப்போது நாம் மேற்கொண்டுள்ள தொழிலும், எதிர்காலத்தைக் குறித்த நம் திட்டங்களும், நமது ஆசையும் தகுதியானவைதானா? என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். காலம் குறுகியது என உணர்த்தவே “வாலிபனே, இந்த இளம் நாட்களிலேயே உன் சிருஷ்டிகரை நினைந்து” மனம் திரும்பி வாழ்ந்திடு என வேதம் நம்மை வேண்டிக் கூறியுள்ளது!
- வாலிபம் இயேசுவுக்கே