கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.07.2026
‘ஹிட்லர்’ மனந்திரும்பியிருந்தாலும், இயேசு அவனை இரட்சித்திருப்பார்!
இந்த உலகில், மாபெரும் கொடும் தீயசெயலைப் புரிந்த மனிதன் ஜெர்மனி தேசத்தின் ஹிட்லர் என்ற கொலை பாதகன்! சிறியோர், பெரியோர், வாலிபர், குழந்தைகள், விருத்தாப்பியர் என்ற அனைத்துப் பிரிவினரும் அடங்கிய 60லட்சம் பாவமறியா அப்பாவி யூத மக்களை அந்த பஞ்சமா பாதகன் விஷ வாயு உலைகளில் தள்ளி, எரித்து சாம்பல் தூள் ஆக்கினான்! அந்தக் கொடியவன் கூட தனது பாதகச் செயலுக்காக தனது வாழ்வின் இறுதி மணி நேரத்தில் மனங்கசந்து அழுது புலம்பி, மார்பில் அடித்து தேவனிடம் மன்னிப்புக்காக கதறியிருந்தால், திரளான பாவங்களை மூடும் அன்பின் கருணாகரன் இயேசுகிறிஸ்து அவனது பாவங்களையும் மன்னித்து, அவனுக்கும் மோட்ச பாக்கியம் அளித்திருப்பார்! அதுதான், இயேசு இரட்சகரின் கல்வாரி அன்பின், கிறிஸ்தவ மார்க்கம்!
தேவன் அன்பாகவே இருக்கின்றார் என்று பரிசுத்த யோவான் அப்போஸ்தலன் எழுதினார் (1யோவான் 4:8). தேவனின் முழு உருவமே அன்புதான்! அந்த அன்பு திரளான பாவங்களை மூடும் (1பேதுரு 4:8) என்று, பேதுரு தமது நிருபத்தில் குறிப்பிடுகின்றார். ஆங்கில வேதாகமத்தில் “திரளான” என்ற வார்த்தைக்கு “மல்ட்டிடியூட்” (Multitude) அதாவது “பெரும் எண்ணிக்கை”என்பதாக உபயோகிக்கப் பட்டுள்ளது. அந்த பெரும் எண்ணிக்கைக்கு முன்பாக 100 மற்றும் 200 எல்லாம் நெருங்கி நிற்க முடியாது. “நம்முடைய பாவங்களை நாம் தேவனுக்கு அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9) என்ற தேவ வசனத்தில் “எல்லா அநியாயம்” என்ற வார்த்தையில் நமது அனைத்துப் பாவங்களும் அடங்கி விடுகின்றன! இயேசு வழங்கிய இந்த அன்பின் சுவிசேஷத்தை, ஓ வாலிபனே உன் மனதார ஏற்று, இரட்சிக்கப்படுவாயாக!
- வாலிபம் இயேசுவுக்கே
