ஒரு முகமதிய தளகர்த்தர், ஒரு சமயம் அரபி தேசத்து பாலைவனத்தின் வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாலிபன் ஒரு பெரிய ஆட்டு மந்தையின் 300 ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர் அந்த வாலிபனண்டை சென்று “தம்பி, உனது ஆடுகளில் ஒன்று எனக்கு வேண்டும். நான் அதற்கான விலைக்கிரயத்தை உனக்கு தந்திடுவேன்” என்று கூறினார். அதற்கு அந்த வாலிபன் “ஐயா, நான் இந்த ஆடுகளுக்கு சொந்தக்காரன் அல்லன். நான் கூலிக்காக ஆடுகளை மேய்ப்பவன். எனது எஜமானரின் அனுமதியின்றி, இந்த ஆடுகளில் எதனையும் நான் தர இயலாது” என்று பணிவோடும் சாந்தத்தோடும் கூறினான்.
அந்த ஆட்டிடையனின் உண்மையைச் சோதிப்பதற்காக அந்த தளகர்த்தர் “தம்பி, உனது எஜமானர் இங்கே இந்த வனாந்தரத்தில் இப்பொழுது இல்லை. அவர் எங்கேயோ கண் காணாத தொலை தூரத்தில் இருக்கின்றார். நீ எனக்கு ஒரு கொழுமையான ஆட்டை அதற்கான விலைக்கிரயத்துக்கு தா. உனது எஜமானர் அந்த ஆட்டைக் குறித்துக் கேட்டால், அதை ஒரு ஓநாய் வந்து பட்சித்துப்போட்டது என்று ஒரு பொய்யைச் சொல்லி விடு” என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த ஆட்டிடையன் சற்று நேரம் மௌனம் ஆனான்! சற்று நேர அமைதிக்குப் பின்னர், அவன் தனது வாயைத் திறந்து “நல்லது ஐயா, உங்கள் வார்த்தைகளின்படி நான் எனது எஜமானரை எளிதாக ஏமாற்றிவிடலாம். ஆனால், நான் வழிபடும் எனது அல்லாவை (இறைவனை) நீங்கள் சொன்ன வார்த்தைகளால் ஏமாற்ற முடியாதே. அவருடைய கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவே!” என்று சொன்னான். அந்த உண்மையுள்ள ஆட்டிடையனின் வார்த்தைகளை கேட்டு மனமகிழ்ந்த அந்த தளபதி அவனுக்கு தக்க சன்மானம் கொடுத்துவிட்டுச் சென்றான். அன்பான வாலிபர்களே, என்னுடைய அந்தரங்கத்தின் ஒவ்வொரு செய்கைகளையும், தேவன் பார்த்துக் கொண்டிருக்கிறார்! என்பதே “தெய்வ பயத்தின்” உணர்வாகும். இந்த ஆண்டு முழுவதும் கர்த்தருக்கு பயந்து ஜீவித்திட உங்கள் யாவருக்கும் தேவன் கிருபை செய்வாராக!