கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
வட இந்தியாவின் காசிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண், தமிழ்நாட்டின் 32 வயது வாலிபன் ஒருவனைக் கண் இமை தட்டாமல் மிகுந்த மோகத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றாள். அந்த வாலிபன் தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து காசியை விட்டு தமிழ்நாட்டுக்குப் புறப்பட்டுப்போகின்றான். இனி அந்த வாலிப மங்கை அவனைத் தன் வாழ்வில் ஒருக்காலும் சந்திக்கவே இயலாது! அந்த இளம்பெண் அத்தனை ஆச்சரியத்துடன் அவனை ஏன் அப்படி உற்று நோக்கினாள்? காரணம் இதுதான்:
அந்தப் பெண்மணி தன் வாழ்க்கையில் எத்தனையோ வாலிபர்களைச் சந்தித்தவள். அவர்கள் அனைவரையும், அவள் தன் கண்ணில் சிக்க வைத்துப் பாவப்படுகுழியில் விழவைத்தவள்! அவளுடைய காம கவர்ச்சிக்கு ஒருவரும் தப்பிச் செல்ல இயலவில்லை! ஆனால் மேற்கண்ட வாலிபனை அவளால் தன் மாய வலையில் விழவைக்க இயலவில்லை. அது ஏனென்றால், அந்த வாலிபன், சிறுபிராயத்திலிருந்தே தெய்வ பயத்தில் வளர்க்கப்பட்டவன். அவனுடைய பெற்றோர் இரட்சிக்கப்பட்டு வேத தியானமும், ஜெப ஜீவியமும் நிறைந்தவர்கள்! காசிப்பட்டணத்தில் இரண்டு ஆண்டு வேலை செய்த காலத்தில், அவனது பெற்றோர்கள், அவனைத் தொடர்ச்சியாக “பாலிய இச்சையிலிருந்து” விலகி ஓட எச்சரித்து புத்தி சொல்லியிருந்தார்கள். இப்போது அவன், தன் பணி முடித்து, தமிழ்நாடு திரும்பி வர ஆயத்தப்பட்டான்!
அன்று மாலை, தகாத முறையில் ‘சிரித்து’ நெருங்கி வந்த அந்தப் பெண்ணின் துர் - நோக்கத்தை இந்த கிறிஸ்தவ வாலிபன் அறிந்து கொண்டான்! தன் வாலிபத்தை அற்பத்தனமாய் சீரழிக்கும் அந்தப் பெண்ணை உற்று நோக்கியதும், அவன் கண்ணீர் வடித்தான்! அதைக் கண்டு அதிர்ந்த அந்தப் பெண்ணிடம்: “வாலிபமும், அதன் இச்சையும் மாயை! ‘இந்த நல்ல வாலிபக்காலத்தில்’ சிருஷ்டி தெய்வத்தின் கையில் அடங்கி வாழ்வதே மேன்மை! ‘பாவம் கழுவி’ புதுவாழ்வு தரும் இரட்சகர் இயேசுவிடம் வாருங்கள்” என கூறியதும்.... அவள் கண்ணீருடன் தன் பாவம் அறிக்கை செய்து புதுவாழ்வு பெற்றாள்! வாலிப சகோதர, சகோதரிகளே! வாலிப காம வலையிலிருந்து விடுபட்டு, தூய்மையான ஜீவியம் செய்திட, இரட்சகர் இயேசுவிடம் உங்கள் வாழ்வை இன்றே அர்ப்பணியுங்கள்!