கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஒரு தடவை மரணம் சம்பவித்த ஒரு சிறந்த கிறிஸ்தவ வீட்டில் அடக்க ஆராதனை நடந்தது. ஆராதனையின் முடிவாக, அந்த வீட்டின் மகள் தனது தகப்பனை அணைத்தவாறே அழைத்துக் கொண்டு வந்தாள். அவளுடைய தாயார்தான் மரணமடைந்து பிரேதப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தார்கள்! அந்த வயதான மனிதர் பிரேதப்பெட்டியண்டை வந்து குனிந்து தனது வாழ்நாட் காலம் முழுவதும் தன்னுடன் வாழ்க்கையில் பயணம் செய்த தனது அன்பு மனைவியைப் பார்த்து “சுகமாய்ப் போய் வாருங்கள் (Good Bye) நான் உங்களை விரைவில் சந்திப்பேன்” என்று சொன்னார்! அவருக்குப் பின் அவரது மகளும் அப்படியே சொன்னாள்! அவளுக்குப் பிறகு அவளுடைய 2 சகோதரர்களும் அவ்வண்ணமாகவே தங்களது தாயின் சடலத்தைப் பார்த்து குனிந்து சொன்னார்கள்!
மூத்த மகனோ ஒரு குடிகாரன். அவன் வீட்டின் கதவண்டை தனது கண்களில் கண்ணீரை வடித்தவண்ணமாக நின்று கொண்டிருந்தான். அவனது தம்பி அவனண்டை சென்று “டாம், நீயும் வந்து அம்மாவுக்கு நல் விடை கொடு” என்று சொன்னான். தன்னுடைய சரீர பெலவீனம் மற்றும் மதுபான பழக்கம் காரணமாக அவன் முன்னேறி வர தயக்கம் காண்பித்தான். ஆயினும், அந்த வாலிபனைப் போன்று அத்தனை துயரத்துடன் தன் தாய்க்காக அழுத ஒரு வாலிபனை நான் கண்டதே இல்லை. அவன் ஏங்கி ஏங்கி “அம்மா, அம்மா” என்று கதறி அழுதவனாக நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவனது சகோதரி அவனண்டை வந்து “டாம், அம்மாவுடைய மரணத்தை நீ மிகவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. அம்மா, மோட்சத்திற்குச் சென்றிருக்கின்றார்கள். நீயும் கூட விரைவில் அவர்களைச் சந்திக்கலாம்” என்று சொன்னாள். அந்த வாலிபன் தனது ஒரு கரத்தை என் மீதும் அடுத்த கரத்தை அவனது சகோதரியின் மீதும் போட்டவனாக “ஓ, என் தேவனே, நான் மோட்சம் போகப் போவதில்லை, நான் மோட்சம் போகப்போவதில்லை” என்று சொல்லி கதறி அழுதான்.
உடனே அவனுடைய சகோதரியும், தம்பியும் “அண்ணா, இப்போது நீங்கள் அழுது தாழ்மையுடன் பேசிய வார்த்தைக்கு, பரலோகத்தின் கதவு உங்களுக்காக திறக்கப்பட்டது” என கூறிய அடுத்த கணமே, நல்ல விசுவாசம் பிறந்து அந்த குடிகார அண்ணன், அம்மாவின் சடலத்திற்கு அருகில் முழங்கால்படியிட்டு, “அம்மா, நானும் இரட்சிக்கப்பட்டுவிட்டேன்! உங்களை நானும் சீக்கிரத்தில் பரம தேசத்தில் காண்பேன்” என மெய் சிலிர்க்க கூறினான்!