கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
சுவிசேஷப் பிரசங்கியார் ஒருவரிடம் ஒரு கிறிஸ்தவ இளைஞன் ஒரு சமயம் வந்து “ஐயா, நீங்கள் என் ஆத்துமாவைக் குறித்துக் கவலை கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. மோட்சம் செல்லும் திரள் கூட்டத்தினுள் நானும் ஒருவனாக எப்படியாயினும் நழவிச் சென்று விடுவேன்” என்று கூறினான். அதற்கு மாறுத்தரமாக அந்த ஞானமுள்ள தேவ மனிதன் “தம்பி, நீ ஒரு தவறான இடத்தைப்பற்றிக் கூறுகின்றாய் என்று நான் நினைக்கிறேன். நீ நினைக்கின்ற திரள், திரள் கூட்டமான ஜனம், மோட்சத்திற்கு அல்ல, நரக பாதாளத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. நீ வேண்டுமானால் சாவதானமாக நழுவி, நரகத்தின் அக்கினி கடலுக்குச் செல்லலாமே தவிர, மோட்சத்திற்குள் நழுவிச் செல்லும் காரியத்திற்கு ஒருக்காலும் இடமே இல்லை” என்று கூறினார். சற்றே நடுங்கிப்போய்விட்ட அந்த இளைஞன் ‘இப்போது’ தன் ஆத்துமாவிற்காக மெய்யாகவே கரிசனை கொள்ளத் துவங்கினான்.
மேற்கண்ட அந்த இளைஞனைப் போலவே, இன்று அநேகர் மோட்சம் செல்லுவது அத்தனை எளிது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். “.... கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமா யிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்.7:13,14) என்றும் “அழைக்கப் பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்ட வர்களோ சிலர்” (மத்.7:14) என்றும், கர்த்தருடைய வார்த்தை தெளிவாகக் கூறுகின்றது. நோவா காலத்துப் பூர்வ உலகத்தின் முழு ஜனத்திரளிலும், தேவனின் கிருபைப் பேழைக்குள் கடந்து சென்றோர் இரு கை விரல்களின் எண்ணிக்கையில் அடங்கும் குறைவான எட்டுப்பேர் மாத்திரமே!
நாம் கிறிஸ்து இரட்சகரில், ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நன்னாளில் பெற்ற நம்முடைய இரட்சிப்பே, நம்மை நித்தியானந்த மோட்ச இன்ப நாட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடியது!
தான் பாவி என்று உணர்வடைவதும்! தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுவதும்! கிறிஸ்துவுக்குள் பழைய வாழ்க்கை ஒழிந்து..... புதிய வாழ்க்கை துவங்குவதுமே, நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்குள் இட்டுச்செல்லும் விலையேறப் பெற்ற இரட்சிப்பு!!