கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

09.08.2025
இம்மை வாழ்வில் மகிழ்ந்த ‘தவளையின் முடிவு’ நமக்கு வேண்டாம்!
அந்த நாளின் நண்பகல் வெயிலில் கற்களின் நடுவிலுள்ள குழியில், ஒரு தவளை ஆனந்தமாக அமர்ந்திருந்தது! அந்த இடம் அதற்கு “ஏர் - கண்டிஷன்” அறையில் இருப்பது போன்ற குளுமையை கொடுத்திருக்கும். அந்த ஆனந்தமான வாழ்வை அந்த தவளை நீண்ட காலமாக அனுபவித்து “மணி அடித்தால் சாப்பாடு. மாதம் பிறந்தால் சம்பளம்” என்ற பழமொழிப்படி அதின் நாட்கள் கடந்து சென்றன. இருளானதும் வீட்டின் அருகில் வந்து மின் விளக்குக்கு கீழாக அமர்ந்து கஷ்டமின்றி தனது ஆகாரத்தை பிடித்து உட்கொண்டுவிட்டு தனது உறைவிடத்துக்கு சென்றுவிடும்!
ஆனால், அந்த ஆனந்தமான வாழ்வுக்கு முடிவுகாலம் நெருங்கியது. எதிர்பாராத நேரம், பகலின் வெயிலில், தான் இருக்கும் ஆனந்தமான இடத்தில் பாம்பு ஒன்று திடீரென தனக்கு நேராக வருவதைக் கண்டு தவளை அதிர்ச்சியடைந்தது! முன்னால் ஓடி தப்ப இயலாது. பக்கவாட்டிலும் ஓடித் தப்பிக்க இயலாதவாறு இரு பக்கங்களிலும் கற்கள் இருந்தன. மிகவும் நிர்ப்பந்தமான நிலை. நல்ல வெயில் காயும் நேரத்தில் பொந்திற்குள் இருக்கும் தவளையின் மோப்ப வாசனை கிடைத்து அந்த பெரிய பாம்பு உள்ளே நுழைந்தது. ‘பாம்பின் வாயிற்குள்’ நிச்சயமாய் சிக்கிவிடுவோம், என்ற அச்சத்தில் மிரண்டு நின்றது தவளை!
மேற்கண்ட தவளையாரைப்போன்று திடீரென தங்களுக்கு எதிராக வரும் மரணத்தைக் குறித்து சற்றும் சிந்தை கொள்ளாமல், தங்கள் மட்டாக ஆனந்தமாக உலக உல்லாசபுரியில் மயங்கி திளைத்து வாழும் மாந்தர் பலகோடி பேர் உண்டு. சுகபோகமான “ஏர் கண்டிஷன் வாழ்க்கை”, எந்த ஒரு கவலையும் கிடையாது! அவர்களுடைய திரண்ட செல்வம் வங்கிகளிலே கிடக்கின்றது. தங்களுக்கு ஒரு ஆத்துமா இருக்கின்றது. மரணத்திற்கு பின்னர் அது மோட்சம் அல்லது நரக பாதாளத்திற்குச் செல்லும் என்ற எந்த எண்ணமோ, கவலையோ அவர்களுக்கு கிடையாது. ஜெபம், வேத வாசிப்பு, தேவனைத் தேடுவது, மனந்திரும்புவது, பரிசுத்தமாக வாழ்வது எல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும் புரியாத பரிகாச வார்த்தைகளாகும்!
ஒருநாள் வரும். அந்த நாளில் மரணம் என்ற பாம்பு ஒன்று கணவனுக்கு நேராக திடீரென வரலாம் அல்லது மனைவிக்கு நேராக வரக்கூடும். தேவனற்ற தனிமையின் துயரத்தையும், வேதனையையும் குறித்து விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை! இணைந்து வாழ்ந்த ஆரவாரமான கூட்டு வாழ்வு நொடிப் பொழுதில் உடைந்து நொறுங்கி மண்மேடாகிட முடியும்!
அன்பான சகோதரா, தேவனைத் தேடாமல், மனந்திரும்பாமல், தேவனுக்கு பயந்து பரிசுத்தமாக வாழாத உங்கள் நிலைகுறித்து, இன்றே மனந்திரும்புங்கள்! இரட்சிக்கப்படுங்கள்!
- வாலிபம் இயேசுவுக்கே
