கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
“சாத்தான் ஒரு கைதேர்ந்த ஓவியன். அவன் பாவத்தை கவர்ச்சிமிக்க வண்ணங்களில் சித்திரந் தீட்டுகின்றான்” Satan is an artist, he paints sin in a very attractive colors என்று ஒரு பக்தன் கூறினார். எத்தனை உண்மையான வரிகள் அவை! நம்முடைய கண்கள் காணும் தேவனுக்குப் பிரியமற்ற காட்சிகளையும், மனதில் தோன்றும் அசுத்த எண்ணங்களையும் பிசாசு தனது கைவன்மையால் நேர்த்தியாகச் சித்திரம் வரைந்து நமது கண்களுக்கு முன்பாக திரும்பத் திரும்பக்கொண்டு நிறுத்தி, நம்மைப் பாவம் செய்ய வழிநடத்திச் செல்லுவான். மனதில் தோன்றும் எண்ணங்களைக் குறித்து பரிசுத்த அகஸ்டின் பேசுகையில் “உனது மனதில் தோன்றும் எண்ணங்களைக் கருத்துடன் காவல் செய், ஏனெனில் அவைகள் பரலோகத்தில் வாசிக்கப்படுகின்றன” என்றார் (Guard your thoughts for they are read in Heaven).
பாவ உலகிலே மானிடனாகப் பிறந்த எந்த ஒரு மனிதனும் மாம்ச இச்சைகளினால் (பாலிய மோகத்தால்) பெரிதும் தாக்கப்படுகின்றான். ஆதாம் பாவத்தில் வீழ்ச்சியுற்றதும் “அந்த மாம்ச கனியை ஏவாள் புசித்ததே அல்லாமல்” வெறும் மரத்தின் கனி அல்ல என்று நான் சிறுவனாக இருந்தபோது ஒரு விருத்தாப்பிய பிரசங்கியார் கூறிய வார்த்தை என் நினைவுக்கு ஓடோடி வருகின்றது. ஒரு சிலருக்கு பிறப்பிலேயே அந்த ஆசைகள் இருப்பதில்லை. ஆனால் பெரும்பாலோர், இந்த சிற்றின்ப ஆசைகளுக்கு அடிமைப்பட்டே வாழ்கின்றனர். ‘மாம்ச ஆசை’ இச்சைகளின் கோரப் புயலால் சிக்கி சீரழித்த சின்னாபின்னாமான வாழ்வுகளை வேதாகமம் நமக்கு எச்சரிக்கையாக தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றது.
சிற்றின்ப மாம்ச இச்சைகள் என்ற லிவியாதானுக்கு முன்பாக யாரால் நிற்கக்கூடும்? “இதோ, அதைப்பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம் போய், அதைப் பார்த்தவுடன் விழுவான் அல்லவா?” (யோபு 41:9). அரண்மனை உப்பிரிக்கையிலிருந்து அதைப் பார்த்த தாவீது அரசன் விழுந்தான் அல்லவா? இஸ்ரவேல் புத்திரரை சத்துருக்களின் கரங்களிலிருந்து மீட்டு இரட்சிக்க கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட பராக்கிரமசாலியான சிம்சோன் அந்த லிவியாதானைக் கண்டதும் சாய்ந்து வீழ்ந்தான் தானே? ஓ வாலிபனே, கவனம்! உன் பாவங்கள் எத்தனையோ..... அவை அனைத்தையும் மன்னித்து புதுவாழ்வுதர, இயேசு உன்னை அழைக்கின்றார்!