கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஒரு வாலிப பருவத்தில் தன் எதிர்பாலரோடு வைத்திடும் எவ்வித தனிப்பட்ட நட்பும் ஞானமற்ற செயல் என்பதை, வாலிபர்கள் நிச்சயமாய் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வாலிபன் தன் பாலிய மன எழுச்சிகளை ஐஸ்-பெட்டியில் பாதுகாப்பாய் வைப்பதுபோல் வைத்து விட்டு, தன் பாடங்களில் அல்லது தன் வேலையில் மாத்திரமே அதிக கவனம் செலுத்த வேண்டும்! ஒரு வாலிபன், தன் முழு படிப்பை முடிப்பதும், பின்பு ஓர் ஸ்திரமான வேலையில் பணி செய்வதும் வரை திருமணத்திற்கு சிந்தை வைத்திடக் கூடாது! அல்லது ஒரு வாலிபன் குறைந்த பட்சம் 25-வயது முடியும் வரை, ஒரு வாலிப ஸ்திரீ குறைந்தபட்சம் 20-வயது முடியும் வரை திருமணத்தைக் குறித்து யாதொரு சிந்தையும் வைத்திடக் கூடாது!
இவ்வித சாட்சி நிலைக்கு, எவ்வித தராதரத்தையும், எவ்வித சூழ்நிலையையும் ஒரு பொருட்டாய் வைத்திட இயலாது! திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட எதிர்பாலரோடு, யாதொரு இடத்திற்கும் தனிமையில் செல்லுவதை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும். அதுவும் மாலை மயங்கிய அந்தி நேரத்தில், இதுபோன்ற செயல் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும். நமது இந்திய பண்பாட்டிற்கு உட்பட்ட யாராய் இருந்தாலும் இதற்குரிய காரணத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். துர்பேச்சிற்கு இடம் தரும் யாதொரு காரணத்திற்கும் இடம் கொடாதிருக்க, ஒரு வாலிபன் அல்லது வாலிப ஸ்திரீ கவனம் கொண்டிருக்க வேண்டும்!
ஓ வாலிபரே! இந்த நல்ல வாலிப காலத்தில், உங்கள் சிருஷ்டிகரிடம் வருவதே முழு பாதுகாப்பு. பெற்றோரின் விரல்பிடித்து சென்ற நீங்கள், உங்கள் ‘சிருஷ்டிகரின்’ விரலைப் பிடித்துக்கொள்ளுங்கள்! நம் பெற்றோருக்கும் முந்தி உள்ள நம் சிருஷ்டிகரே நம் ‘பரம தந்தை!’. நீங்கள் பரம தந்தையின் பிள்ளையாகும்படியே, இயேசு உங்களுக்காக உங்களைத்தேடி இரட்சகராய் வந்தார்!