கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
மங்கோலியா முழுவதையும் ஜெயித்து சீனாவின் பெரும் பகுதியையும் தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்த மங்கோலிய தளபதி கிங்கிஸ்கானை குறித்த ஒரு நிகழ்ச்சி அவனது டயரியில் எழுதப்பட்டுள்ளது. இந்த கிங்கிஸ்கான் ஒரு கழுகை செல்லமாக வளர்த்தான்.
ஒரு கானக வேட்டையின் போது தன்னோடு அந்த கழுகை எடுத்துச் சென்றான். கானகத்தில் வேட்டையாடிய கிங்கிஸ்கான் மிகவும் தாகம் அடைந்தான். அவனது தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியாக, ஒரு மலை பாறை இடுக்கில் கசிந்த தண்ணீரை, ஒரு குவளையைக் கொண்டு சேகரித்து தனது வாய்க்கு நேராக குடிப்பதற்கு முயற்சித்தப் போது அவனது செல்லக் கழுகு பறந்து வந்து அந்த குவளையை இறக்கையால் அடித்து தட்டிவிட்டது. கிங்கிஸ்கான் கோபமடைந்து கழுகைத் துரத்திவிட்டான்.
அக்கழுகு இவ்வாறு மூன்று முறை கொட்டிவிட்டது! கோபம் கொண்ட அவன் “அடுத்த முறை நீ தண்ணீர் குவளையை தட்டும் பட்சத்தில் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று கூறிய பின்னர் சொட்டு, சொட்டாக வடிந்த தண்ணீரைப் பிடித்து குடிப்பதற்காக வாய் அருகில் கொண்டு சென்றதும் அவனது செல்ல கழுகு சீறிப்பாய்ந்து குவளையை ஓங்கி அடித்து வீழ்த்தி விட்டது. கோபம் கொண்ட மாவீரன் கிங்கிஸ்கான் அடுத்த கணமே தனது கூரிய வாளால் தனது அன்புக்குரிய கழுகை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்திவிட்டான். இரத்த வெள்ளத்தில் கழுகு உயிர் பிரிந்தது!
கடும் தாகம் கொண்ட தளபதி தனது குவளையை எடுத்துத் தண்ணீர் கசிந்து வரும் பாறைக்குச் சென்று அங்குள்ள சிறிய நீர்க்குழியை கண்டு அதிலிருந்து தண்ணீரை எடுக்க முயன்றபோது, அந்த நீர்க்குழியில் ஒரு கொடிய விஷம் நிறைந்த பெரிய கருந்தேள் செத்து மிதப்பதைக் கண்டான். அந்த நீரை அவன் பருகியிருந்தால் அவனுக்கு மரணம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அப்படியான கொடிய விஷ தேள் அது. தன்னை காப்பாற்றி மடிந்த கழுகை பார்த்தான்! கழுகு இனி உயிர் பெற்று வருவது எங்ஙனம்?
வாலிபனே, மூன்று தடவைகள் அந்த கழுகு தனது இறக்கையால் தட்டிக் கவிழ்த்தது போல உனது வாழ்வின் பொன்னான தருணங்கள் தட்டிக் கவிழ்க்கப்பட்டு பயனற்று போய்விட்டது என்று எண்ணுகின்றாயா? தட்டிக் கவிழ்க்கப்பட்டதின் பின்னணியத்தில் உள்ள காரணத்தை, உன்னை தமக்கென ஆட்கொள்ள விரும்பும் நல்ல தேவன் அறிவார். அந்த காரணத்தில், ஒரு மிக முக்கியமானது “உன்னுடைய இரட்சிப்பு”. உலக வாழ்க்கையில் நீ சிக்கி மாளாதபடி, தோல்விகளை அனுமதித்த நல்ல ஆண்டவரிடம் இன்றே மனந்திரும்பி, சோர்வுகள் அகற்றி இரட்சரை கண்டடைவாயாக!