கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

10.06.2026
‘சாத்தான் சபையிலிருந்து’ விடுவித்த அன்பு இரட்சகர்!
தேவபக்தனாய் 19-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த ஆர்தர் பிங்க், ஆரம்ப வாலிப நாட்களில், அவர் எத்தனை பக்தி வளர்ப்பில் வளர்க்கப்பட்ட போதிலும், காலம் செல்லச் செல்ல கிறிஸ்தவ அன்பிலிருந்து தூரமாக விலகிச் சென்றது மாத்திரமல்ல “பிரம்ம ஞான சபை” என்ற சாத்தானின் சபையில் அவர் சேர்ந்துகொண்டார். மனிதன் தன் நல்வினைக்குத் தக்கதாக திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருப்பான் என்ற துர்ப்போதனை, சாத்தான் சபையாரின் முக்கிய கொள்கையாகும். ஆர்தர் பிங்க் ஒவ்வொரு நாளும் தன்னுடைய அந்திக்கிறிஸ்து கூட்டங்களில் பேசிவிட்டு இரவில் வெகு நேரத்திற்குப் பின்னர் வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், அவரின் தகப்பனார் தாமஸ் பிங்க், மிகவும் பொறுமையுடன் வாலிப மகனின் வரவுக்காக ஒவ்வொரு நாள் இரவும் காத்திருந்து, தன்னுடைய மகன் படுக்கைக்குச் செல்லும்போது அவருக்கு “குட் நைட்” என்ற இரவு வந்தனத்தைக் கூறுவதுடன் சேர்த்து ஒரு தேவ வசனத்தையும் சொல்லி அனுப்பி வைப்பார்.
ஒரு இரவில் “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு, அதின் முடிவோ மரண வழிகள்” (நீதி 14:12) என்று சொல்லி அனுப்பினார். மேல் மாடிக்குச் சென்ற ஆர்தர் பிங்க் தன்னுடைய பிரம்ம ஞான சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசுவதற்காகத் தன் அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு சொற்பொழிவுக்கான குறிப்புகளை எழுதும்படியாக முயற்சித்தார். ஆனால், தந்தை சொன்ன மேற்குறிப்பிட்ட நீதி.14:12 ஆம் வசனம் அவருடைய இருதயத்தில் ரீங்காரமிட்டு அவரை எழுதவொட்டாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது. கடைசியாக, இனி தான் எந்த நிலையிலும் தன் ஆண்டவரைப் புறக்கணிக்க முடியாது என்பதைத் திட்டமாக உணர்ந்து, தேவனுடைய இரக்கத்திற்காக ஜெபத்தில் கெஞ்சத் தொடங்கினார். அவரது மேல்மாடியின் அறையில், ஆர்தர் பிங்க் மூன்று நாட்கள் வெளியே வராமல் கர்த்தருடைய இரட்சிப்புக்காகக் கெஞ்சி கதறினார்!
மூன்றாவது நாள் பிற்பகலில், ஆர்தர் பிங்க் கர்த்தருடைய இரட்சிப்பின் பாத்திரமாக, தேவ சமூகப் பிரசன்ன ஒளி நிறைந்த முகத்துடன் தன்னுடைய பெற்றோரண்டை மாடியிலிருந்து இறங்கி வந்தபோது, அவருடைய தகப்பனார் கர்த்தரில் களிகூர்ந்து “கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி உண்டாவதாக. என் குமாரன் இரட்சிப்பைக் கண்டடைந்தான்” என்று ஆரவாரித்தார், ஆர்ப்பரித்தார்! அல்லேலூயா.
- வாலிபம் இயேசுவுக்கே
