கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

09.04.2026
‘நம்பிக்கை இழந்தோரை’ வாழ்வளிக்கும் இயேசுவிடம் வந்திடு!
குருடர்கள் வாசிக்க உதவும் “பிரைய்லி கல்வியை” (Braille System) கண்டு பிடித்தவர் Dr.மூன் அவர்கள்! இருப்பினும், அவர் பிறக்கும்போதே குருடராய் பிறக்கவில்லை. ஆம், ஓர் வாலிபனாய் இருந்தபோதுதான் தன் இரு கண்பார்வையை இழந்தார். “இப்படி அசம்பாவிதம் நடந்து விட்டதே” என அவர் ஒருபோதும் தேவனிடத்தில் கேள்வி கேட்டதேயில்லை. இந்த உலகமே சூனியமாகி இருண்டுபோன நிலையில், யாதொரு முறுமுறுப்பும் அவரிடத்தில் காணப்பட்டதேயில்லை. “ஆண்டவரே, நான் குருடாய் இருப்பதற்காகவும், உம்மை நான் ஸ்தோத்தரிக்கிறேன்!” என்றே அவர் தேவனிடம் ஜெபித்தார். தனக்கு கண்பார்வை மீண்டும் வரவேண்டூம் என அவர் ஆரம்பத்தில் ஜெபித்தது உண்மைதான்! ஆனால் “இனி பார்வை கிடைக்காது” என்பதை உறுதியாய் அறிந்தவுடன், தேவனை நோக்கி “ஆண்டவரே, எனக்குள்ள தாலந்துகளை பயன்படுத்தி உம்மை மகிமைப்படுத்த எனக்கு அருள்புரியும்!” என்றே ஊக்கமாய் ஜெபித்தார்.
Dr.மூன் ஜெபத்தை தேவன் கேட்டார்! கண்பார்வை இழந்த குருடர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவும் “பிரைய்லி கல்வியை” (Braille System) கண்டுபிடிக்க தேவன் அவருக்கு உதவினார். அதன் மூலமாய், பார்வை இழந்த இலட்சக்கணக்கான பேர்கள் ‘பிரைய்லி’ மூலமாய் வாசித்து பயனடைந்து வருகிறார்கள்! வேதப்புத்தகமும் ‘பிரைய்லி’ மூலம் தயார் செய்யப்பட்டு, ஆயிரம் ஆயிரம் பார்வையிழந்த கிறிஸ்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். “எனக்கு ஏன் இந்த துயரம்!” என மனவேதனைப்படும் வாலிபனே, ‘மூன்’ பெற்ற அதே நம்பிக்கையை, ஆண்டவர் உனக்கும் தர விரும்புகிறார்! தேவனால் கூடாதது ஒன்றுமில்லை! ‘கோணலான’ ஜீவியத்தையும் நேராகச் செய்திட தேவனால் முடியும்! உன் கொடிய பாவ வாழ்க்கையை மன்னித்து, புதிதான வாழ்வைப் பெற்றிட, நம்பிக்கையுடன் இயேசுவிடம் வா! நீ வாழ்வு பெறுவாய்!
- வாலிபம் இயேசுவுக்கே
