கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

03.09.2026
ஓ வாலிபனே, அழிவிலிருந்து ‘ஜீவனுக்கு’ மீண்டு வாருங்கள்!
வேதாகமத்தில் லேகியோனைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். பிசாசானவன் அவனை பிரேத கல்லறைகளுக்கும், வனாந்திரங்களுக்கும் துரத்திவிட்டிருந்ததாக வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன (லூக்கா 8:27,29). எத்தனை கொடூரம் பாருங்கள். வீட்டைவிட்டு லேகியோனை துரத்திய சாத்தான், அத்தோடு நின்று விடாமல், குடும்பத்தின் உறவுகள், பாசப் பிணைப்புகள், அன்பின் கட்டுகள் யாவையும் விட்டுப் பிரித்தெடுத்து ஊளையிடுதலுள்ள அவாந்தரமான வனாந்திர வெளிகளுக்கும், நாற்றமும், துர்க்கந்தமும் வீசும் கல்லறை குழிகளுக்கும் அவனை விரட்டி விட்டிருந்தான்!
‘பாலஸ்தீனா தேசம்’ திராட்சத் தோட்டங்கள், அத்தி மரங்கள், ஒலிவத்தோப்புகள் நிறைந்த தேசம். பிசாசானவன், லேகியோனை திராட்சத் தோட்டங்களுக்குள் விரட்டி விட்டிருக்கலாமே! பசிக்கும் நேரம் திராட்சை கனிகளைப் பறித்துப்புசித்து, வெயில் எரிக்கும் நேரம் திராட்ச செடிகளின் நிழலில் லேகியோன், சுகமாக படுத்துக்கொள்வானே! ஆனால், பிசாசு பஞ்சமாபாதகன், கருணையற்ற கல்நெஞ்சினன்! அவனை, பசி பட்டினி போட்டு வதைத்து, பகலின் வெயிலையும், இரவின் பனியையும், அவன் மேல் பெய்யச் செய்து, அவனை சாகடிப்பதுதானே பிசாசின் நோக்கம்!
தினந்தோறும் சாலைவிபத்துக்களின் மூலமாக, எத்தனை லட்சாதி லட்சம் மக்களை சாத்தான் வாரிக்கொண்டிருக்கிறான்! வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு மதுபானத்தை நாசி வரை குடிக்கக்கொடுத்து, அவர்கள் கரத்தின் சுக்கானை சாத்தானே தனது கரத்தில் பிடித்து ஓட்டி, வாகனங்களை மோதி உடைத்து நொறுக்கி, நொடிப்பொழுதில் ஏராளமான மக்களின் உயிர்களை தினமும் குடித்து வருகின்றான்! தேவன் தாமே அவனது கொடிய வல்லடிகளுக்கு கர்த்தருடைய சொந்த பிள்ளைகளாகிய நம்மை விலக்கி காத்து, அவனது சதி ஆலோசனைகளில் நாம் விழுந்துவிடாதபடி நம்மை பாதுகாத்து நடத்துகின்றார்! இந்த மகத்துவ இரட்சக பெருமானை புறக்கணித்திடாமல், அவரிடம் மனந்திரும்பி அண்டிவந்து, பாவ மன்னிப்பின் புண்ணியம் பெறுங்கள்! பாவியாகிய நீங்கள் இரட்சிப்படையுங்கள்! ஜீவனை கண்டடையுங்கள்! அழிவிலிருந்து காக்கப்படுங்கள்!
- வாலிபம் இயேசுவுக்கே
