கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
“நீ ஏன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வரவில்லை?” என கேட்டார், முதலாளி. “பரிசுத்த ஓய்வுநாளில் நான் வேலை செய்யக்கூடாது என்பது என் கர்த்தரின் சித்தமாகும்” என்றான் அந்த வாலிபன் ஸ்டிவான்ஸோ. “அப்படியா, இந்தச் சுரங்கத்தில் இனிமேல் நீ ஒருக்காலும் வேலை செய்யக் கூடாது என்பதும் கர்த்தரின் சித்தமே. நீ வீட்டுக்குப் போகலாம்” என்று நகையாடி அனுப்பிவிட்டார், சுரங்க முதலாளி. முதலாளியின் கோப வார்த்தைகளால் ஸ்டீவான்ஸின் விசுவாசம் சற்றும் தளர்ந்து விடவில்லை. “வானாதி வானங்களுக்கும் தேவன், கன்மலைகளின் தேவன் என் நல்ல நண்பனாக இருக்கின்றார். என் வேலையே போனாலும், அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை” என்று கூறிவிட்டு அமைதியாக சென்று விட்டான் ஸ்டிவான்ஸோ என்ற பெயர் கொண்ட அந்த வாலிபன்! சில நாட்களுக்குப் பின்னர் மேற்குறிப்பிடப்பட்ட சுரங்கத்தின் முதலாளி, சுகவீனப்பட்டபோது, தன்னுடைய ஸ்தானத்தில் உண்மையாய் பணியாற்ற யாரால் முடியும்? என யோசித்துப் பார்த்தார். அவர் மனதில் “தெய்வத்தை நம்பி வாழ்ந்த” ஸ்டிவன்ஸோ வாலிபனே தோன்றி மறைந்தான்! உடனே ஸ்டிவான்ஸோவை அழைத்து வரக்கூறி, தன் சுரங்கத்தின் சாவியை அவனிடம் ஒப்படைத்து “இனி நீ தான் இந்த சுரங்கத்தை நிர்வகிக்கும் மேனேஜர். ஞாயிற்றுக்கிழமை, நம் சுரங்கத்திற்கு விடுமுறை!” என கூறியதைக் கேட்டு, ஸ்டிவான்ஸோ கண்ணீருடன் தன் கர்த்தரின் உத்தமத்தை துதித்தான். ஓ வாலிபனே, தேவனை உன் வாழ்வின் முதலிடம் வைத்துப் பழகு! தன்னை அவ்வாறு கனம் செய்கிறவர்களைக் கர்த்தரும் கனம் செய்வார்! தனக்கு ‘முதலிடம் கொடுத்து’ கனம் செய்தவனை, தெய்வம் கனப்படுத்தாமல் இருந்ததேயில்லை!