கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஆண்டவர் இயேசுவை எனது சொந்த இரட்சகராக நான் ஏற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டன. என் தேசத்திலுள்ள எனது சொந்தக் கிராமத்தில் பயமுறுத்துதல்களுக்கும், கொலை மிரட்டல்களுக்கும், மரணப் போராட்டங்களுக்கும் நடுவில்தான் நான் இன்றுவரை தேவனுடைய பிள்ளையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை ஆட்கொண்ட கர்த்தர், என்னை கண்மணி போல தமது கரங்களால் பாதுகாத்து இந்த உலகம் தரும் எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள் யாவையும் நான் தைரியமாய் வெற்றி கொண்டு முன்செல்லத்தக்கதாய் தமது கிருபைகளையும் இரக்கங்களையும் நாள்தோறும் அபரிதமாக எனக்கு அளித்துக்கொண்டு வருகின்றார்.
எனது தாயார் தன்னுடைய கட்டுக்கடங்காத ஆவலில் என்னை எப்படியாவது கிறிஸ்தவத்திலிருந்து அவர்களது புறமதஸ்து வழிபாட்டிற்கு திருப்பிவிட ஆசை கொண்டு ஒரு சூனியக்காரியை அணுகி தனது சூனியத் திறமையைக்கொண்டு என்னை அவர்களின் புறமதஸ்து மார்க்கத்துக்கு கொண்டு வர முயற்சித்தார்கள். தாயாரின் விருப்பப்படி அந்த சூனியக்காரி பல்வேறு இருளுக்குரிய முயற்சி எடுத்துப் பார்த்தார்கள்! முடிவில், எங்கள் வீட்டுக்கு வந்து எல்லா உறவினர்களின் மத்தியில் அவர்கள் எல்லாரும் ஆச்சரியத்தால் பிரமிப்படையும்படியாக இவ்விதமாக கூறினார்கள்: “உங்கள் குமாரன் இப்பொழுது பின்பற்றிச் செல்லும் பாதையிலிருந்து இனி ஒருபோதும் திசை திரும்பப் போவது இல்லை. அதை மறக்கப்போவதும் கிடையாது. அந்தப் புனிதப் பாதையில் அவன் நடக்கும் காலம் வரை அவன் தன் வாழ்வில் ஜெய கெம்பீர வெற்றி வீரனாக திகழுவான்”. இயேசு இரட்சகரைக் குறித்து இத்தனை ஆச்சரியமான வல்லமையின் சாட்சி சூனியக்காரியான அந்த பெண்மணி கூறிய வார்த்தைகளைக் கேட்ட எனது இளைய உடன் பிறந்த சகோதரன் உடனே ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான்! எனவே, தேவனுடைய சித்தம் செய்வதில் நான் ஒருவன் மாத்திரம் தனிமையாக இருந்து போராடவில்லை! எனது தம்பியும் என்னுடன் சேர்ந்து கொண்டான். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலுடைய வார்த்தைகளில் என் கிறிஸ்தவ உறுதிப்பாட்டை கூற வேண்டுமானால் :
“மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப்பிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்” (ரோமர் 8:38,39).