கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.03.2026
‘பாவ களைகளை’ தன் ஜீவியத்தில் விதைப்பது அபாயம்!
1868 ஆம் ஆண்டு பாரீஸ் நாட்டில் நடந்ததோர் வேதாகம கண்காட்சி சாலை! காட்சி சாலையின் சுவரில் ஒரு படம் தொங்கிக் கொண்டிருந்தது. அது களைகளை விதைக்கும் ஒரு மனிதனின் காட்சியாகும்! படத்தின் கீழ் “களைகளை விதைக்கும் மனிதன்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அவனுடைய முகம் பித்துப்பிடித்த கோரபயங்கரமாயிருந்தது! அவனுடைய கரத்திலே ‘களை வித்துக்கள்’ அடங்கியதோர் கூடை இருந்தது. அவன் ஒவ்வொரு முறையும் ஒரு களையை பூமியிலே விதைக்கையில், அவன் உடல் நடுங்கியது!
அன்பானவர்களே, நீங்கள் களைகளை விதைத்தால் களைகளையே தான் அறுப்பீர்கள்! மதுபானம் விற்போரும், சூதாட்டக்காரர்களும், கொலைபாதகரும், பாலிய குற்றம் புரிந்து மற்றவர்களை நாசமடையப் பண்ணியவர்களும் மனந்திரும்பாமல், பரலோகத்திற்குள் பிரவேசிக்கக்கூடும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ? இல்லவே இல்லை. “களைகளை விதைப்போர் களைகளையேதான் கட்டாயம் அறுக்கவேண்டும்” என்ற உண்மை, உங்கள் உள்ளத்தை தொட்டு, உங்களை மாற்றுவதாக!
இனிமேலாவது, விழிப்புடன் வாழுங்கள்! நித்தியத்துக்கடுத்த காரியங்களோடு நீங்கள் விளையாட வேண்டாம். கண்ணைப் பறிக்கும் வானத்தின் மின்னலோடு விளையாடுங்கள்! துரிதமாகப் பரவக்கூடிய கொடிய தொத்து வியாதிகளோடுகூட விளையாடுங்கள்! ஆனால், நித்திய நியாயத்தீர்ப்போடு மாத்திரம் எக்காரணத்தைக் கொண்டும் விளையாடாதேயுங்கள்! தேவனுடைய வழிகள், நம்முடைய வழிகளைப்போலான, வழிகள் அல்ல. வானத்திற்கும் பூமிக்குமுள்ள உயரத்தைப்போலவே, தேவனின் வழிகள் நம்முடைய வழிகளுக்கு அப்பாற் பட்டதாயிருக்கின்றது. மிகுந்த உல்லாசமாய் பாவத்தோடு சஞ்சரித்து வாழும் மாந்தர்கள் யாராயிருந்தாலும், ஒருநாளில் நியாயாதிபதி முன்பாக நின்று ஆக்கினைதீர்ப்பு அடைய வேண்டும் என்ற உண்மையை உணருவோமாக! ஓ வாலிபனே, இரட்சகர் இயேசு அருளும் மீட்பின் புண்ணியம் ஒன்றே, உன்னை மாற்ற ஒரே வழி என்பதை அறிவாயாக! இயேசுவின் அந்த புண்ணியமே, தேவ கோபாக்கினைக்குத் தப்பி, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவும் உன்னை நடத்தும்!
- வாலிபம் இயேசுவுக்கே
