கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
அநேக ஆண்டு காலங்களுக்கு முன்பாக, நான் ஜெர்மனி நாட்டில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது புகழ்பெற்ற சித்திரக்கலைக் கூடங்கள் சிலவற்றைப் பார்வையிட்டேன். அந்நாட்டின் முனிச் என்ற பட்டணத்திலுள்ள ஒரு கலைக்கூடத்தில், நான் கண்டதொரு சித்திரத்தின் காட்சி என் மனதில் ஒரு ஆழமான பரவச உணர்வை உண்டாக்கிவிட்டது. புயற்காற்று ஒன்றின் வரவை முன்னறிவிக்கும் காட்சிதான் அது:
கரிய மழை முகில்கள் ஒன்று திரண்டு, உருண்டு எழுந்து, அச்சுறுத்துகின்றதும், வரப்போகும் கடும் புயலுக்கு முன்னர் வீசும் காற்றின் வேகத்தில் மரங்கள் தலை விரித்து ஆடுவதும்! ஆடு மாடுகளும், குதிரைகளும் சீறிப் பாய்ந்து வரும் புயற்காற்றின் வேகம் கண்டு பயந்து, வயல் வெளிகளின் குறுக்கும், நெடுக்குமாக, மிரண்டு விரைந்து ஓடுகின்றதும்! ஒரு சிறிய கூட்டம் ஆண்கள், பெண்கள், சிறு பிள்ளைகள் கூனிக் குனிந்த நிலையில், பயத்தால் முகம் வெளுத்தவர்களாய் பார்வை, நடை செயலாற்றல், ஒவ்வொன்றிலும் திகிலும், கிலியும் கொண்ட மக்களாகக் கொடும் புயலுக்கு முன்னால் ஒரு மறைவிடத்தைத் தங்களுக்கெனத் தேடிக் கொண்டு ஓடுபவர்களின் காட்சியாகச் சித்திரக்காரர் அப்படத்தைத் தீட்டியிருந்தார்!
ஓ வாலிபனே! வாழ்வின் மெய்யான புகலிடம் எது தெரியுமா? உன் பாவ வாழ்வைச் சுற்றி சூறாவளியாய் உன்னை அழித்திட வரும் பாவத்தின் கொடூரத்திலிருந்தே நீ புகலிடம் தேட வேண்டும். உன்னை சீறும் அழிவான வாலிபம், பல்வேறு பாவ ரோகங்களிலிருந்தும், பழக்கத்திலும் உன்னை விடுவித்து இரட்சிக்கும், இரட்சக பெருமானே, உனது புகலிடம்! தஞ்சம் கொள், அவரே என் இரட்சகர் என தஞ்சம் கொள்!