கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஒருமுறை நாம் விசுவாசத்தோடு ஆண்டவரது கரங்களில் நமது பிரச்சனைகளை ஒப்புக்கொடுத்த பின்னர், அவைகளை நினைத்து திரும்பவும் நாம் ஒருக்காலும் கவலைப்படத் தேவையில்லை. நம்முடைய பிரச்சனைகளை ஆண்டவர் கரங்களில் விட்டு விட்டு வந்த பின்னர், மீண்டும் அவர் பின்னாக ஓடி அந்தப் பிரச்சனைகளை அவரது கரங்களிலிருந்து தட்டிப் பறித்தெடுத்து, திரும்பவும் அவற்றிற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருத்தல் கூடாது. நாம் நமது பொறுப்புகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது என்பது உண்மைதான்! ஆயினும், நாமோ நம்முடைய பிரச்சனைகளை மகா திறமையான தேவாதி தேவனின் கரங்களில் அளித்துவிட்டோம்! நம்முடைய தேவனோடு நாம் நாள்தோறும் ஐக்கியம் கொண்டு ஜீவிப்பதற்கு அனுகூலமான ஓர் பாடல், ஸ்விட்ஸர்லாந்து நாட்டுப் பழைய பாட்டுப் புத்தகமொன்றில் கீழ்கண்டவாறு உள்ளது:
நான் சந்திக்கும் துன்பம், கடந்து செல்லும் துன்பமே!
துன்பத்தை எதிர்கொள்ள உமது பெலன் ஈவுமே!
என் தந்தையே உமது ஞானம் பெரிது! மா பெரிது!
தந்திட்டேன் என்னையும் முழுவதுமே.....
அஞ்சிடேன் இனியும் அஞ்சிடேன்!
நமக்கு முன்னாலுள்ள அநேக உத்தம கிறிஸ்தவர்களைப்போலவே, நாமும் பாடுகளையும், உபத்திரவங்களையும், துன்பங்களையும் இந்த ஆண்டும் சந்திப்போம்! ஆனால், நாம் ஒரு மாட்சிமையான இரட்சகனையும் நம் வசம் கூடவே வைத்திருக்கின்றோம் என்பதை மறத்தல் கூடாது!
எப்படி ஒரு குழந்தையானது, தான் செய்யும் நன்மை, தீமையான காரியங்களின் மூலமாக அனுபவங்களைக் கற்றுக்கொள்ளுகின்றதோ அப்படியே வாழ்க்கையில் தனக்கு வந்து சம்பவிக்கும் பிரச்சனைகளை மனமகிழ்ச்சியுடன் ஏற்று, அவற்றை ஆண்டவர் கரங்களில் வைப்பதன் மூலமாகவே, ஒருவன் முதிர்ந்த கிறிஸ்தவனாகின்றான்!
ஓ வாலிபனே! நீ இன்று முதல் நம் இரட்சகரை விசுவாசித்து வாழ்ந்தால், இந்த ஆண்டின் முடிவில் ஓர் சிறந்த, தூய பரிசுத்தவானாய் நீ முற்றுப்பெறுவது அதிக நிச்சயம்!!