கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
கர்த்தர் ஜீவனுள்ள தேவன் என்பதை நாம் மறக்கக்கூடாது. எந்த மோசத்திலும், எந்த அந்தகார வேளையிலும் அவர் கூடவே இருக்கிறார். ஒரு பக்தன் பின்வருமாறு எழுதுகின்றார்:
“44 வருஷ காலமாக என் ஆண்டவரை அறிந்த நாள் முதல், என்னை ஒருபோதும் அவர் கைவிடவில்லை. கொடிய கஷ்டங்களில், பலத்த சோதனைகளில், மிகுந்த தரித்திரத்தில், அவசிய நேரங்களில், பெலவீனங்களில் என்னைத் தாங்கி சகாயம் செய்தார். எனக்கு மிக நெருங்கின இனத்தார், சிநேகிதரைவிட அவர் எனக்கு அதிக அறிமுகமானவர். அந்த அன்பு இரட்சகரைக் குறித்துப் பேசுவது எனக்கு எத்தனை ஆனந்தமாயிருக்கின்றது!” என நன்றியுடன் கூறினார்.
கிறிஸ்து மார்க்கத்தின் பெலனும், மாட்சிமையும் இதுவே. இவ்வுலகத்தில் நாம் போராட வேண்டியதிருந்தாலும், தனிமையாய் போராட வேண்டியதில்லை. “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடிருக்கின்றேன்” “நான் உன்னை விட்டு விலகுவது மில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று நம்முடைய இரட்சகர் சொல்லு கிறார். இம்மையிலிருந்து மறுமைக்கு நாம் போகும் பிரயாணத்தில் என்ன நேர்ந்தாலும், அவர் நம்மோடு கூடவே இருக்கிறார்.
இம்மையிலும், மறுமையிலும் அவரே நமது வாஞ்சை! துன்பத்தில் இன்பம், கவலையில் ஆறுதல், கலக்கத்தில் ஆலோசனை, பயத்தில் தைரியம், இருட்டில் வழிகாட்டி.... எல்லாம் அவரே!
எந்த உபத்திரவத்தையும் சகித்துக்கொள்ள நம் கூடவே இருந்து நமக்குப் பெலன் கொடுத்து வருவார். நமது மூச்சு ஒடுங்கும் கடைசி நேர மட்டும் சகல நாட்களிலும் அவர் நம்மோடிருப்பதைவிட வேறே என்ன வேண்டும்? நாம் கடைசியில் ‘மரண நதி’ யோர்தானைக் கடக்கும்போதும் நமது கரம் பிடித்து நடத்திப் பரம கானான் கொண்டுபோய் சேர்ப்பார். இப்படிப்பட்ட அன்பின் ஆண்டவர் நமக்குச் சொந்தமா யிருப்பது மட்டுமே போதுமானது. வேறொன்றும் வேண்டாம். அல்லேலூயா.
வாலிப நாட்களில் சார்ந்து கொண்டு வாழ ஏராளமான ஆதாரம் இருக்கும்போதே, உன் சிருஷ்டிகரை சார்ந்து பழகு! ஏனெனில், கர்த்தர் ஒருவரே உன் ஜீவ காலம் முழுவதும் உன் ஆதாரம், உன் பங்கு!!