கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
குதிரையின் கடிவாளத்தை இணைக்கும் இரண்டு கடிவாள வார்களும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த இருவார்களின் உதவியால்தான் குதிரையை நீங்கள் விரும்புகிற இடத்திற்கு ஓட்டிக்கொண்டு செல்ல முடியும். கடிவாளத்தின் ஒரு வார் நீளமாகத் தளர்ந்த நிலையிலும், மற்றொன்று மிகவும் இறுக்கமாகப் பிடிப்பான விதத்திலும் இருந்தால் குதிரை திசை திரும்பிச் சென்றுவிடும். இந்தத் தளர்த்திய நீள வார் என்ன? அளவுக்கு மீறி புசிப்பது, மிகுதியாகப் பேசுவது, உடலின் தேவைக்கும் அதிகமாகத் தூங்குவது, ஓட்டல் உணவு விரும்புவது, அனாவசியமாக நின்று அல்லது உட்கார்ந்து விலையேறப்பெற்ற நேரத்தை போக்கடிப்பது, பக்தி விருத்திக்கு பயனற்ற வீண் கதை பேசுவது மற்றும் நியாயமான தேவையில்லாமல், அதிகமாகச் சரீரத்தின் ஆசை விருப்பங்களை, தான் இச்சிக்கும், காம விருப்பங்களுக்கும் நிறைவேற்றிக் கெடுப்பது.... போன்றவையாகும்.
கடிவாளத்தின் இறுக்கமான பிடிப்பாயிருந்த வார் எது? தன் சொந்த சரீரத்திற்கு நியாயமாகத் தேவைப்படுபவைகளைக் கொடுத்து, அதை போஷித்துப் பராமரிக்காமல் காலம் தவறி புசிப்பது, சரீர சுத்தத்திற்குரிய கடமையை இழப்பது, போன்ற வதைக்கும் செயலாகும்! கடிவாளத்தின் இரும்பை இணைக்கும் இருவார்களும் எப்பொழுதும் சமநிலைப் பிரமாணத்தில் இருக்க வேண்டும்!
ஓ, இளைஞனே! தாறுமாறாய் தறிகெட்டு ஓடும் உன் ஜீவியத்தை உன் ஆண்டவருக்கு கொடுத்துவிட்டால் ‘அன்று ஒரு கழுதைக் குட்டியில் அமர்ந்து’ வந்ததுபோல், உன் வாழ்வை பரம எருசலேமிற்கு நடத்திச் செல்வாரல்லவோ? உன் சரீரத்தை ஒடுக்கி நித்திய வாழ்க்கை வாழ்ந்திட, இன்றே உன்னை அவருக்கு ஒப்புவித்திடு! அந்த ஆண்டவர் ‘ராஜ கனத்தோடு’ உன்னை செம்மையான, பரிசுத்த பாதையில் நடத்திடுவார்!