கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
18-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து தேசத்தை சார்ந்த தலைசிறந்த மிஷனெரி யோனாத்தான் கோபோர்த் அவர்களின் தாய் ரோசலிண்ட் அம்மையார், தான் இரட்சிக்கப்பட்ட விதத்தை கீழ்கண்டவாறு எழுதினார். நான் 12வயது சிறுமியாக இருந்தபோது ஆல்பிரட் சந்தாம் என்ற பிரசங்கியார் யோவான் 3:16-ம் வசனத்தைக் கூறி ஒரு சுவிசேஷ கூட்டத்தில் பிரசங்கித்தார். தேவனுடைய அன்பின் ஆழம், நீளம், அகலம், உயரத்தின் விசித்திர அன்பை மிகுந்த உணர்ச்சியோடும், தேவ அன்பின் பெருக்கத்தோடும் அவர் விளக்கிக் காண்பித்துக் கொண்டிருந்த வேளையில், நான் என்னை முற்றுமாக ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து, எனது பரம எஜமானரின் அடிமையானேன்.
கூட்டத்திலிருந்து நான் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது “கிறிஸ்து இரட்சகர் உன்னை தனது சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்று நம்பிக் கொண்டிருப்பது எத்தனை முட்டாள்தனமானது” என்று சாத்தான் திரும்பத் திரும்ப என் காதிலே பேசிக்கொண்டே இருந்தான். அடுத்த நாள் அதிகாலை எனது பாட்டியம்மா எனக்கு இங்கிலாந்து தேசத்திலே கொடுத்த எனது வேதாகமத்தின் பக்கங்களை புரட்டினவளாக “ஆண்டவரே, நீர் என்னை உமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டதின் நிச்சயத்தை உமது வசனத்தின் மூலமாக உறுதி செய்யும்” என்று ஜெபித்தேன். “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோவான் 6:37) என்ற வசனத்தை தேவன் எனக்கு கொடுத்து என்னை களிகூரப்பண்ணினார். மேற்குறிப்பிட்ட அந்த தேவ வசனம், எனது எல்லா சந்தேகத்தையும் என்னிலிருந்து விரட்டி அடித்தது!
பின்பு சாத்தான் “நீ ஆண்டவருடைய பிள்ளையாக இருப்பதற்கு முற்றும் தகுதியற்ற மிகவும் சிறு பிள்ளை” என்று எனது காதிற்குள் திரும்பவும் வந்து பேசி என்னை குழப்பமடையச் செய்தான். நான் திரும்பவும் ஆண்டவருடைய வேதத்திற்கே சென்று, அதின் பக்கங்களைப் புரட்டி, கர்த்தர் இது விஷயத்திலும் எனக்கு உதவி செய்ய அவரை நோக்கிக் கெஞ்சினேன். “அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” (நீதி.8:17) என்ற தேவ வசனத்தை கர்த்தர் எனக்குக் கொடுத்து என்னை அமரப்பண்ணினார். மேற்கண்ட இரு வசனங்களும் தேவன் என்னைத் தமது சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்ற எனது விசுவாசத்தை ஆழமாக உறுதிப்படுத்தியது. அதன்பின்பு, எனக்கு எந்த ஒரு சந்தேகமும், தடுமாற்றமும் கடைசி வரை ஏற்படவே இல்லை. அன்பான வாலிபர்களே, உங்கள் இரட்சிப்பையும், அதன் உறுதியையும் இன்றே துரிதமாய் பெற்றிடுங்கள், காலம் மிகக் குறுகியது!