கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

03.07.2025
துன்பத்தில் தேவனைக் கண்டு, அவரை கிட்டிச் சேருங்கள்!
சிலர் வாழ்க்கையை ஓர் பாரச் சுமையாகக் கருதுவதினால் உலகில் உயிர் வாழவும் மனமுடைந்து துக்கிக்கின்றனர். வாழ்க்கை எக்காரணத்தைக் கொண்டும் பழுவான பாரச் சுமை அல்லவென்று என் சொந்த வாழ்வின் அனுபவத்தில் கண்டிருப்பதால், மேற்குறிப்பிட்ட மக்களின் கருத்திற்கு நான் ஒருக்காலும் அனுதாபம் தெரிவிக்கமாட்டேன்.
நமது பழுவான பாரச் சுமையை, சர்வ வல்ல தேவன்மேல் உருட்டித் தள்ளிவிட்டு, அவரோடு நாம் ஜீவித்து, அவர் நமக்காக எந்தப் பாதையை ஆயத்தம் பண்ணியுள்ளாரோ அந்தப் பாதையில் நடந்து, அவருடன் சம்பாஷித்து, அவரிலேயே நாம் பூரண நம்பிக்கை வைப்போமாக! நமக்கு நேரிட்ட எல்லாச் சோதனைகளும், பாரங்களும் நிச்சயமாகவே நமது நித்திய நன்மைக்கேதுவாக நடந்திருக்கிறது என்பதை நாட்கள் போகப் போக, நமது வாழ்வின் சூழ்நிலை முடிவில் கண்டு தேவனுடைய தயவுள்ள கரத்தின் செயல்களுக்காக நாம் நன்றியோடே அவரை ஸ்தோத்திரிப்போம்!
வியாதி நம்மை மேற்கொள்ளுகிறதென்றால், அதுவும்கூட நமது ஆசீர்வாதத்திற்கும், நன்மைக்குமேதான்! வாழ்வின் இறுதியில் நித்திய நன்மை அளிக்கவே தேவன் தமது பிள்ளைகளுக்கு அவற்றை அனுப்புகிறாரேயன்றி வேறெந்தக் காரணமும் கிடையாது! நாம் செய்ய வேண்டியது என்ன? நமக்கு வேதனையளிக்கும் வியாதியை ஆண்டவரிடத்தில் சொல்லுவோம்! நம்பிக்கையில் சோர்வடையாமல், அவரிடம் சொல்லி, அவருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்போம்! மட்டுமல்ல, நாம் அவருக்கு அடங்கி, அமைதியாய் இருக்கும்படியான கிருபைகளையும் அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்!
இந்த உலக மாந்தரைப்போல், துன்பத்தில் வீழ்ந்து மடிவது தெய்வ நோக்கம் அல்ல! “உங்களை சிருஷ்டித்தவர்” என்ற நன்றி உணர்வு நிச்சயமாய் உங்களை பாதுகாக்கும்! உங்களை அவர், எந்நிலையிலும் கைவிடமாட்டார் என்ற உங்களின் அருமையான விசுவாசம் உங்களை அரவணைக்கும்!
ஓ வாலிபனே, உன் இளவயது துன்பங்கள், உன்னை பாவ இன்பத்திற்கு நடத்தாமல், சிருஷ்டிகரண்டை கிட்டிச் சேர்ப்பதாக!
- வாலிபம் இயேசுவுக்கே
