கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் என்ற இடத்தில் 29 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட “கலைடா பறவைகள் சரணாலயத்தில்” ஆங்காங்கு நீர்ப்பறவைகள் திரள் கூட்டம் கூட்டமாக இருக்கும்! ஆனால், சைபீரிய நாரைகள் மாத்திரம் முற்றிலும் தனிமையான இடத்தில் சேர்ந்து இருப்பதை கவனித்தோம். அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நாரைகளுக்கு அருகாமையில் கொக்குகளோ, கூழக்கடாக்களோ, புள்ளினங்களோ மற்றும் எந்த ஒரு பறவைக்கூட்டங்களோ தென்படவில்லை! அந்த முழு பறவைகள் சரணாலயத்திலும் மேற்குறிப்பிட்ட சைபீரிய நாரைகள் மட்டும் தங்கள் தனித்தன்மையை காண்பித்து நின்றன. ‘மாயாபுரி சந்தையிலே’ கிறிஸ்தியானும், உண்மை என்ற அவனது தோழனும் எப்படி உலக மக்களிடமிருந்து வேறுபட்டு காணப்பட்டார்களோ, அவ்விதமாகவே அந்த சைபீரிய நாரைகளும் தனித்து காணப்படுவதாகவே கருதினோம். நான் உலகத்தான் அல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல (யோவான் 17:16) என்று இயேசு இரட்சகர் தமது சீடர்களை சுட்டிக்காண்பித்துக் கூறினார். இந்த மாய உலக, கானல் நீர் தடாகத்தில் வந்து இறங்கியுள்ள நாமும், நம்மை இந்த உலகத்துக்கு அந்நியரும், பரதேசிகளுமாக காண்பிக்க வேண்டியதன் அவசியத்தை அந்த நாரைகள் எங்களுக்குச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. “நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்தெடுத்தேன்” (லேவி 20:26) என தேவன் கூறினார்! ஓ, வாலிபனே! இந்த உலக மாயையில் சிக்கிவிடாமல், உங்களை தேவன் பிரித்தெடுக்க நீங்கள் உங்களை ஒப்புக்கொடுப்பது சிறந்த முடிவல்லவா? இந்த உலக அழிவில் சிக்கிக்கொள்ளாதபடி, அதிலிருந்து பிரிந்து வாழ தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக!