கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
மன நோயாளிகளைப் பராமரிக்கும் விடுதியொன்றிலுள்ள ஒரு மனிதனைக் குறித்துக் கூறப்பட்டதை, பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவன் எப்பொழுதும் “ஐயோ, நான் மட்டும் கீழ்ப்படிந்திருந்தால்....” என்று சதா அழுது கூக்குரலிட்டுக் கொண்டேயிருப்பானாம். நாள் முழுவதும் அவனின் கதறல் இது ஒன்றாக மட்டுமே இருந்தது! அந்த மனநோய் வார்டிலிருந்த அனைவரையுமே, அவனது கூக்குரல் சஞ்சலப்படுத்துவதாய் இருந்தது!
அந்த மனிதனின் ஆறாத துயரத்தின் பின்னனி சரித்திரம் இதுதான்: அம்மனிதன் ஒரு ரயில்வே கம்பெனியால் நதியின் குறுக்காகக் கட்டப்பட்டதொரு தொங்கு பாலத்தைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தான். படகு வரும்போது, தொங்கு பாலத்தை திறப்பதும், ரயில் வரும்போது தொங்கு பாலத்தை மூடுவதுமே, அவனுக்குத் தரப்பட்ட பணியாக இருந்தது. ஒருசமயம் விரைவாக ஒரு ரயில், குறிப்பிட்டதான ஒரு மணி வேளையில் அந்த தொங்கு பாலத்தைக் கடந்து செல்லவிருப்பதாக அவனுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தனர். பாலத்தைக் கண்காணித்து வந்த அவன், நதியில் படகுகளை செலுத்தும் சில படகோட்டிகளின் விடாப்பிடியான வேண்டுகோள்களுக்கு இணங்கி அந்த தொங்கு பாலத்தைப் படகுகள் செல்ல வசதியாக சற்று நேரம் உயர்த்திக்கொடுத்தான். அவ்வளவுதான், என்ன பயங்கரம்! சில நொடிப் பொழுதுகளுக்குள்ளாக அந்த விரைவு ரயில் விரைந்து வந்து நதியில் மூழ்கிற்று.
ரயிலிலுள்ள அநேகர் மாண்டு மடிந்தனர். அதனைக் கண்ணுற்ற அம்மனிதன் அழுதான், அங்கலாய்த்தான், தரையிலே உருண்டு புரண்டான், இறுதியில் துக்கம் தாங்காது மனநோயாளியானான். “நான் மட்டும் ரயில் கம்பெனியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து பாலத்தை உயர்த்தாமல் காத்திருந்தால் இத்தனை உயிர் நஷ்டம் ஏற்பட்டிராதே!” என்ற வார்த்தைகளே அவனுடைய கூக்குரலாயிருந்தது!
நித்திய அக்கினிச் சூளையாகிய நரகத்தின் சிறையிலிருந்து அநேக மாந்தர் “அந்தோ, நான் சுவிசேஷத்தின் அழைப்புகளுக்கு மாத்திரம் கீழ்ப்படிந் திருந்தால்” இந்தக் கதி எனக்கு நேரிட்டிராதே! என்று அலறி கதறும் எண்ணற்ற துயர ஓலங்களை நரகத்தில் நாம் கேட்கக்கூடும் என்றே நான் திட்டமாக நம்புகிறேன். நித்தியத்திற்கும் மாற்றிட முடியாத அங்கலாய்ப்பே “நமது இரட்சிப்பின் இழப்பு” என்பதை உணர்ந்து மனந்திரும்பி, இரட்சிக்கப்படுவோமாக!