கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஒரு கிறிஸ்தவ வாலிபன், இரயிலில் ஒருசமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவனிருந்த அந்தப் பெட்டியில், சிலர் நேரத்தைப் போக்குவதற்காக சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். விளையாட்டிற்கு ஒரு ஆள் குறைந்தபடியால், மேற்கண்ட அந்த வாலிபனை அணுகி, அவனையும் சீட்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அப்பொழுது அந்த வாலிபன் சொன்னது இதுதான்:
“அன்பான நண்பர்களே வருந்துகின்றேன், இந்த கரங்கள் எனக்குரியவைகள் அல்ல, இதை இறைவன் இயேசுவுக்கு கொடுத்து ஒரு வருடம் ஆகிறது!” என்றாராம். தேவனுக்கே புகழ் உண்டாகட்டும்!
பரிசுத்த வேதாகமம், நமது சரீரத்தை தேவனுடைய ஆலயமென்றே குறிப்பிடுகின்றது. “நீங்கள் தேவனுடையஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்! தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்” என்றே எழுதப்பட்டுள்ளது! (1கொரி.3:16,17).
வாலிபனே, உன் சரீரத்தை உனக்காக வைத்திருப்பது அபாயம்! ‘உன் இஷ்டம்’ என கூறும் ‘சுய சித்தம்’ கேட்டின் பாவ இன்பத்திற்குள் நடத்தி, உன்னை மோசம் போக்கும்! உன்னை, தன் ஆலயமாய் மாற்றுவதற்கே உயிர் தந்த இரட்சகரிடம் வந்து, பாவியாகிய நீ இரட்சிக்கப்பட்டு, அவர் வந்து வாசம் செய்யும் தேவனுடைய ஆலயமாய் இன்றே மாறிவிடு! அப்போது, உன் ஆத்துமா கெட்டுப்போய் அழியாமல், தெய்வம் வாசம் செய்திடும் நித்திய ஜீவனைப் பெற்று ‘பேரானந்தம்’ பெறுவாய்!