கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!

15.09.2025
உலக இன்பம் ஓர் மாயவலை! விடுதலை தருபவர் இயேசு!!
மேற்குத் தொடர்ச்சி மலை தேசத்தில் ‘நெடுகுளா’ என்ற கிராமத்தின் அருகில், ஒரு சிறுத்தை புலி, ஒரு நாயை துரத்திக் கொண்டு சென்றது. நாய் தனது ஜீவன் தப்ப ஓடி, ஓடி கடைசியாக ஒரு வீட்டிற்குள் சென்று ஒரு அறைக்குள் பதுங்கிக் கொண்டது. சிறுத்தையும் நாயைத் தொடர்ந்து ஓடி அதே அறைக்குள் சென்றுவிட்டது. சிறுத்தை அறையினுள் இருப்பதை அறிந்த வீட்டுக்காரர், உடனே அறையின் கதவை பூட்டிவிட்டார்கள்.
ஒரு ஆச்சரியமான காரியம் என்னவெனில், அந்த சிறுத்தை தன்னோடிருந்த நாயைக் கடித்து உண்ணவில்லை. வீட்டின் அறைக்குள் தானே மாட்டிக் கொண்டதால், தனது சுவையான உணவின் ஆசை எல்லாம் அதை விட்டு மறைந்து போய்விட்டது. தனது ஜீவனே இரும்பில் அடைபட்டு சத்துருவின் கரத்தில் இருக்கும்போது தனக்கு ஒரு சுவையான உணவும் தேவையா? என்று, அது அந்த நாயை கடித்து தின்னவில்லை. அந்த சுவராஸ்யமான செய்தி, அநேகமாக எல்லா தினசரி பேப்பர்களிலும் வெளி வந்தது. சிறுத்தை புலி அந்த நாய்க்கு ஒரு தீங்கு கூட செய்யவில்லை!
வாலிபரே, கேளுங்கள் ஓர் செய்தி: யாரை விழுங்கலாம் என்று சுற்றி அலைகின்ற கெர்ச்சிக்கிற சிங்கமாம் சாத்தானின் பிடியிலுள்ள நமக்கு, உலகத்தின் பிறிதொரு சந்தோஷம் என்னத்திற்கு? நமது அருமையான ஜீவனே அவனது வலைக்குள் சிக்கியிருக்கும்போது, அந்த வலைக்குள் இருக்கும் உலக சிற்றின்ப ஆசை இச்சைகளை சுவைப்பது எதற்காக? சிறுத்தைக்கு தனது உயிரைப் பற்றிய கவலை அதிகரிக்கவே, தனக்கு அருகிலிருந்த சுவையான நாய் மேல் இருந்த ஆசை எல்லாம் பறந்தோடிப்போய்விட்டது!
ஆனால், ஞானமுள்ள மாந்தராகிய வாலிபரே, நமது காரியம் ஏன் மாறுபாடாய் உள்ளது? சத்துருவாகிய பிசாசின் கண்ணியில் நாம் சிக்கியிருந்தாலும், அந்த கண்ணிக்குள் நமக்காக வைக்கப்பட்டிருக்கும் உலக ஆசை இச்சைகளை முழு மூச்சுடன் அனுபவித்து வருகின்றோமே? அது, நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதல்லவா? கர்த்தரை மனதார தேடி, உங்கள் ஆத்துமாக்களை உலக மாயையிலிருந்து உங்களை காத்துக்கொள்ள வேண்டாமா?
- வாலிபம் இயேசுவுக்கே
