கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
வருஷத்தின் முதல் நாளிலிருந்து அதின் கடைசி நாள்வரை, தேவனுக்கென்று ஒரு சிறிய சிந்தனைகூட கொள்ளாமல் இருக்கும், கிறிஸ்தவன் ஒருவனிருந்தான்! தனது வியாபாரத்திலிருந்தும் அந்த மனிதன் தேவனை வெளியே அகற்றி விட்டான். தனது சமுதாய குடும்ப வாழ்விலிருந்தும் அவன் இயேசுவை விரட்டியோட்டி விட்டான். கர்த்தருடைய நாளாகிய ஞாயிறு ஆராதனையை களியாட்டத்தின் நாளாக்கிக் கொண்டான். தேவனுடைய வேதத்தை அவன் ஒருக்காலும் மதிப்பதே கிடையாது! மாறாக, தனக்காக மரித்த தேவ மைந்தனை, அவருடைய கிருபையை தன்னுடைய கால்களின் கீழ்வைத்து நசுக்கிப் போட்டான். தன்னை சிருஷ்டித்துத் தன்னுடைய பாவ மீட்புக்கென்று தனது ஒரே மைந்தனை சிலுவையில் மரிக்க அன்பாய் ஒப்புவித்த தேவனையே புறம்பாக்கினவனாய் இவ்வுலகில் வாழ்ந்தான்! இவ்விதமான வாழ்க்கையிலேயே அம்மனிதன் கடைசியாக மரிக்கின்றான்!
இவன், நீதியுள்ள நியாயாதிபதியின் முன் நிற்க வேண்டியதோர் நாள் இல்லை என்று நீங்கள் என்னிடம் கூறக்கூடுமோ? “என்னுடைய சபை கூடுதலை ஏன் புறக்கணித்தாய்? என்னுடைய வேதத்தின் பரிசுத்த கற்பனை கட்டளைகளை ஏன் உதாசினம் செய்தாய்? எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இரட்சிப்பிற்காக நான் தந்த என்னுடைய ‘ஏக சுதனை’ என்ன செய்தாய்?” என்ற, சர்வலோக நியாயாதிபதியின் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
மெய்யாகவே ஒரு நியாயத்தீர்ப்பின் நாள் உண்டு. நாம் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானபடியால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு புகலிடம் தேவை. பாவத்தின் வல்லமையிலிருந்தும், தந்திரப் பிசாசின் வல்லமை யிலிருந்தும், கடைசியாக வரப்போகும் தேவ கோபாக்கினையிலிருந்தும் நமக்கோர் புகலிடம் தேவை. தன் சிலுவையில் நமக்காகவே இருகரம் விரித்த இயேசு ஒருவரே நமது புகலிடம். அவர் ஒருவரே நமக்கு பாவமன்னிப்பும், நித்திய ஜீவனும், அடைக்கலமுமாயிருக்கிறார்! ஓ வாலிபனே, அவரை நீ இன்றே அண்டிக்கொள்! நியாயத்தீர்ப்பிற்கு விலகி நில்!