கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
இம்மை வாழ்வுக்குப்பின், ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு இடங்கள் முத்திரிக்கப்பட்டிருக் கின்றன. 1) மோட்ச வாழ்வு 2) நரக வாழ்வு. பூவுலகத்தில் ஜீவிக்கும் போதே தேவனுடைய இரக்கமான கிருபையைக் கொண்டு, இவைகளில் ஏதாகிலும் ஒன்றை அவன் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அவன் இந்த உலக வாழ்வை விட்டுப் பிரிந்த பின்னர், மறுமையில் இந்த தெரிந்துகொள்ளுதலை அவன் செய்திட முடியாது. இம்மையை விட்டு அவன் கடந்து சென்றபின் “எந்த இடத்திற்குப் போய் சேருகின்றானோ” அங்கேயே, முடிவற்ற யுகாயுகங்களாக அவன் இருக்க வேண்டும். அங்கு சென்ற பின், அவன் தன் வாழும் இடத்தை மாற்றிக்கொள்ள முடியாது!
மோட்ச வாழ்வை தெரிந்து கொண்டு, மனந்திரும்பி இயேசுவின் இரட்சிப்பை அடைந்தவர்களுக்கு, இந்த பூமியில் கிடந்து அழுந்தித் துயருறும் எந்தவித நோயோ, துன்பமோ, மோட்சம் என்ற அந்த ஜீவனுள்ளோர் தேசத்தில் இல்லை! மாய்மாலமும், முகஸ்துதியும், பொறாமையும், பொய்யும், மூர்க்கமும் அங்கில்லை! திருடரும், கொடியரும், பேராசைக்காரரும், பொருளாசைக்காரரும், சோம்பேறிகளும், அடங்காதவர்களும், வஞ்சகர்களும் அந்தப் பரிசுத்த பூமியில் இருக்கமாட்டார்கள்! மூப்பும் - சாக்காடும் அங்கில்லை! மனிதர்கள் பயப்பட ஏதுவான எதுவும் அங்கில்லை!
நரக வாழ்வை தெரிந்து கொண்டு, மனம் போனபடி பாவ இன்ப வாழ்க்கை வாழ்ந்தவர்கள், பங்கடையும் ஸ்தலத்தில் அக்கினியும் கந்தகமும் கலந்து ஜூவாலித்து எரிந்து கொண்டிருக்கும்! அந்த நரக பாதாளத்தைக் காரிருள் எப்பொழுதும் மூடியிருக்கும்! துர்நாற்றம் நிறைந்த புயல்களும், சூறாவளிகளும் இங்கு சதா வீசிக்கொண்டிருக்கும்! நரகத்தில் கிடப்போர் எல்லாரும் ஒருவரையொருவர் கடுமையாகப் பகைத்துக்கொண்டிருப்பதுடன், பாவத்தை தங்கள் நெஞ்சில் உருவாக்கி, பூமியை சாபத்தீடாக்கி தங்களையும் எரிநரகத்தில் தள்ளிய பிசாசையும் தொடர்ந்து சபித்துக்கொண்டிருப்பார்கள்!
மனுஷீக வார்த்தைகளினால் விவரிக்க முடியாத அளவு, விதவிதமான கொடிய வேதனைகளையும், பாடுகளையும் நரகத்தில் ஒரு ஆத்துமா அனுபவிக்க வேண்டும்!
வாலிபனே, உன் இளமையின் வஞ்சகத்தில் வீழ்ந்துவிடாமல், மனந்திரும்பி உன் இரட்சகரை நாடு! இந்த நல்ல வாய்ப்பு உன்னை விட்டு தாமதமாவது ஆபத்து என்பதை தயவாய் அறி!