கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
திருமணமாகப்போகும் தனது மணப்பெண்ணுக்கு, மண நாளன்று உடுத்துவதற்காக பட்டணத்தின் அந்த பெரிய ஜவுளிக்கடையில் ஏராளமான புடவைகளைப் பார்த்து ஒதுக்கிய பின்னர், இறுதியில் கண்கவரும் அழகு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அந்த மணமகன் தெரிந்தெடுத்தான். தான் தெரிந்துகொண்ட அந்த அழகுப் புடவையை கட்டிக் கொண்டு, தன் மணவாட்டி திருமண நாளன்று மௌனமாய் வருவதைக் கண்டு அந்த மணமகன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை!
ஆனால், அவன் தெரிந்து கொண்ட விலையேறப்பெற்ற அந்த பட்டுச் சேலை மூலமாக தனது சடுதியான மரணத்தை விலைகொடுத்து வாங்குகின்றோம் என்பதை, சரியாக 30 நாளுக்குப் பின்னர்தான் அந்த மணவாளனால் கண்டு கொள்ள முடிந்தது, அந்த அழகுப்புடவையை உடுத்திக் கொண்டு, தன் இளம் மனைவி தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்க, அவன் வாகனத்தை விரைவாக ரஸ்தாவில் ஓட்டிச் சென்றான். அந்தோ, எதிர்பாராதவிதமாக அந்தப் புடவையின் தொங்கல் அந்த இரண்டு சக்கர வாகனத்துக்குள் நன்கு மாட்டி, இருவரும் ரஸ்தாவில் தூக்கி எறியப்பட்டனர். புது மணமகன் பலத்த காயமுற்று பரிதாபகரமாக மரணமடைந்தான்!
சகோதரா, மரணம், தான் விரும்பி அணிந்த புடவையின் ரூபமாக மாத்திரமல்ல, வேறு பல்லாயிரம் ரூபமாகவும் சடுதியாக வரக்கூடியது! எனவே ஜாக்கிரதையாயிருந்து தேவனிடத்தில் மனந்திரும்பு! இதுவே அனுக்கிரக காலம், இன்றே இரட்சண்ய நாள்.
“அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காக கண்ணீர் விட்டழுது, உனக்கு கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாய் இருக்கிறது” என இயேசு வருந்தி அழைக்கிறார்! (லூக்கா.19:41,42).