கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
பிரியமான கர்த்தருடைய ஒரு சகோதரியை பல ஆண்டு காலமாக நானறிவேன். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினிமித்தம், என்னையும் என் ஊழியத்தையும் ஊக்கமான ஜெபத்தால் ஆதரிக்கும் சகோதரி அவர்கள்! வயது முதிர்ச்சியினிமித்தம் கடந்த சில மாதங்களாக வியாதிப்பட்டு மிகவும் அல்லல்பட்டார்கள். அவர்களுக்காகத் தேவ மக்கள் பலர் ஏறெடுத்த ஜெபங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. மரிப்பதற்கு முந்தியநாள் இரவு, நான் அவர்களைக் காணச் சென்றிருந்தேன். மிகவும் அமைதியாகப் படுத்திருந்தார்கள். வலியின் காரணமாக அவ்வப்போது மாத்திரம் சற்று குரல் எழுப்பினார்கள். நான் அவர்கள் அருகினில் சென்று அவர்களின் கரத்தைப் பிடித்தேன். அது ஐஸ்கட்டிபோல அத்தனையான குளிர்ச்சி நிலையிலிருந்தது. அவர்கள் முகத்துக்கு நேராகக் குனிந்து நான் அவர்களைக் கூப்பிட்டபோது தனது கண்களைத் திறந்து, மலர்ந்த முகத்துடன் என்னை நோக்கிப்பார்த்தார்கள். “அம்மா, ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கின்றீர்களா?” என்று நான் அவர்களைக் கேட்டேன். என்ன ஆச்சரியம், நான் அந்தக் கேள்வியைக் கேட்டவுடனே, அமைதியில் இருந்த அவர்கள் “அல்லேலூயா” என்று மிகவும் சப்தமாகக் கூறினார்கள். “ஐயா நான் ஆயத்தமாகவே இருக்கின்றேன். எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறினார்கள்.
அவர்கள் படுக்கை அண்டையில் நான் முழங்கால்படியிட்டுச் சகோதரியை நித்திய இளைப்பாறுதலுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்துவிட்டு வந்தேன். அடுத்தநாள் காலையில், அவர்கள் அதிகமாக நேசித்த தனது நல் மேய்ப்பரது ஆனந்த சமூகத்திற்குக் கடந்து சென்றுவிட்டார்கள். ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகளின் ஆனந்த நம்பிக்கை இது ஒன்றுதான். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் தீத்துவுக்கும் இதையேதான் குறிப்பிட்டு எழுதியிருப்பதை நாம் காணலாம். “நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி” நமக்குப்போதிக்கிறது (தீத்து.2:13).
ஓ, வாலிபனே நீ இந்த நாட்களிலேயே உன்னை கர்த்தருக்கு ஒப்புவித்து, வாழ்ந்துவிடு! நிறைவான பக்தி வாழ்க்கை மாத்திரமே, உன்னை அந்த அம்மையாரைப்போல “மரணத்தை மகிழ்வுடன் தாண்டி” ஒளிமிருந்த கர்த்தாவின் இராஜ்ஜியத்திற்குள் உன்னை கொண்டு சேர்க்கும்!