கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
13.09.2024
திரும்பி வந்த நன்றியுள்ள ‘கொக்கு போல’ உன் இரட்சகரின் அன்பிற்கு திரும்பு!
அசீஸ் என்ற வாலிபன், வேட்டை துப்பாக்கியால் காயம்பட்ட ஒரு இளம் கொக்கை பார்த்ததும் மனதுருகினான். அதை இராச்சாப்பாட்டுக்கு தயார் பண்ணுவதற்கு பதிலாக அதை எவ்விதமாக காப்பாற்றலாம் என்று ஆழமாக சிந்திக்கத் தொடங்கினான். உடனே அவனுக்கு ஒரு யோசனைபட்டது. ஒரு துணியை கற்பூரத்தைலத்தில் தோய்த்து காலில் காயம்பட்ட பகுதியில் அதை வைத்து இரண்டு குச்சிகளை பாங்காக செதுக்கி அவற்றை காலில் வைத்து நேர்த்தியாக கட்டி அதற்கான மருத்துவ பக்குவங்களை கவனித்தான். அதற்கு ஒரு கூடு செய்து அந்த கூட்டிலே அதை ஆறு மாத காலம் வைத்து காலின் காயத்தை முற்றுமாக ஆற்றி அதை பூரண சுகத்துக்கு வழிநடத்தி விட்டான். கொக்கு, நல்ல பறக்கும் நிலையை எட்டிவிட்டது. ஆனால், அசீஸ் அதைவிட்டுவிட மனமற்றவனாக இருந்தான். அவன் அதை அதிகமாக நேசித்தான்.
கொக்கு தன்னோடு இருக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவை ‘அந்த கொக்கே’ தெரிந்து கொள்ளட்டும் என்று தீர்மானித்து, ஒரு நாள் அதை, தனது கண்களில் கண்ணீர் வடிய அதை பறக்க விட்டுவிட்டான். அது ஒரு மரத்தின் உச்சியிலே போய் அமர்ந்தது. அசீஸ் தனது கண்களில் கண்ணீர் வடிய அதை, தான் வைத்த “போரா” என்ற பெயரில் அழைத்தான். அது அப்படியே கீழே எட்டிப்பார்த்தது. என்ன ஆச்சரியம், அடுத்த கணம் அது கீழே பறந்துவந்து தனது ஆபத்தில் உதவி செய்து, தனக்கு மீண்டும் உயிர்கொடுத்த தனது எஜமானனின் தோளில் வந்து அமர்ந்து கொண்டது. அந்த நாளிலிருந்து அது தனது எஜமானனுடனேயே இருந்து வருகின்றது. பகலில் வெளியே பறந்து சென்று மீன்பிடித்து உண்டுவிட்டு, இரவில் வீடு திரும்பிவிடுகின்றது!
ஆனால் நாமோ, நமக்கு ஜீவன்கொடுத்து நம்மை உன்னதங்களிலே பறக்கவிட்ட கர்த்தனை மறந்து நன்றிகெட்ட காட்டுக்கொக்குகளாக அவரது சமூகத்திலிருந்து விலகி ஓடிவிட்டோம். எத்தனை நன்றி கேடு! ஒரு அற்பமாக நாற்றமெடுக்கும் பறவை இனம், தனக்கு அன்பு செய்த ஒரு மனிதனுக்கு தன்னையே சமூலமாக அர்ப்பணம் செய்து தனது கைம்மாறை காட்டும்போது, தேவ சாயலாக படைக்கப்பட்ட வாலிபனே, உனக்காக தமது ஜீவனையே கொடுத்த உனது அன்பு இரட்சகரை விட்டுவிலகி ஓடி, அவருடைய அன்பிற்கு துரோகம் செய்வது சரிதானா?
- வாலிபம் இயேசுவுக்கே