கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
நேப்பாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலுள்ள மிருக காட்சி சாலையைப் பார்க்கும்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது.
ஓரிடத்தில் இரண்டு பெரிய காண்டா மிருகங்கள் மிகவும் சாவதானமாக தங்களுக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த புல்லை மேய்ந்து கொண்டிருந்தன.
அந்த மைதானத்தை சற்று கூர்மையாக பார்த்தபோது ஒரு கெபி போன்ற இடத்தினுள் மிருகங்களுக்கெல்லாம் அரசனான ஒரு பெரிய சிங்கம் மல்லாக்க படுத்து தனது நான்கு கால்களையும் ஆகாயத்துக்கு நேராக உயர்த்திக் கொண்டிருந்தது. குளிரான அந்த பனி காலத்தின் மத்தியான வெயில் அதற்கு அத்தனை இதமாக இருந்தது. அதினுடைய சந்தோசத்திற்கு அளவில்லை!
அந்த மிருகேந்திரனான சிங்கத்தின் சந்தோச களிப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எந்த விதத்திலும் அது அங்கிருந்து வெளியே தப்பி ஓடிவிடாமலிருக்க அதைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள உயரமான சுற்று மதிலையும், அதற்கு மேலாக நாட்டப்பட்டிருந்த ஈட்டி கம்பிகள் வேலியையும், அது சற்றும் சிந்தித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தனது விலையேறப்பெற்ற ஆத்துமா, சத்துருவாகிய பிசாசின் நித்தியமான கிடுக்கிப் பிடியில் சிக்குண்டு இருப்பதையும், தன்னால் விடுவிக்கக்கூடாத பாவ பழக்க வழக்கங்களான இரும்புக்கூண்டுக்குள் அடைபட்டிருப்பதையும், தனது முடிவு நித்தியமான நரகம் என்பதையும் மனிதர்கள் உணர்ந்தபாடில்லை. உலகத்தின் மாயையான அற்ப நிமிட நேர இன்பங்களில் அவன் பூரிப்படைந்து, இந்த வையகத்தின் மண்ணிலே மேலே கண்ட சிங்கம் போல உருண்டு புரண்டு கொண்டிருக்கின்றான்.
வாலிபனே, உன்னை ‘பாவ கூண்டிலிருந்து’ விடுவிக்கும் இயேசு இரட்சகரை நோக்கிப்பார்த்து சீக்கிரமாய் விடுதலை பெறுவாயாக! உன் பாவ கூண்டிலேயே நீ மாய்ந்து போகாதபடி மனந்திரும்புவாயாக!