கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
கிறிஸ்தவ பரிசுத்த வாழ்க்கைக்கு மனசாட்சி இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் தேவனுடைய ஊழியம் செய்வதற்கு அது இன்னும் வெகு முக்கியமானதாகும்! தேவ ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு “நீ விசுவாசமும் நல் மனசாட்சியும் உடையவனாயிரு” (1தீமோ.1:18) என்று பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எழுதினார். நாம் இணைந்திருக்கின்ற சபைகளில், நாம் பக்தி வைராக்கியம் காண்பித்து விசுவாசத்தை நிரூபித்து காண்பிக்கும் ஆற்றல்கள் நமக்கு இருக்கலாம். ஆனால், நல் மனசாட்சியில்லாமல் நமது விசுவாசத்தை காண்பிப்பது ஒன்றுக்கும் உதவாது. விசுவாசத்திற்கு சாட்சியாக ஜீவித்தார் என்று நாம் மக்களால் பாராட்டுகள் பெற்றும் நம்மிடம் நல்மனசாட்சி இல்லையென்றால் அதினால் யாதும் பயன் கிடையாது. நமது தேவ ஊழியங்கள் ஆசீர்வாதமாயிருப்பதற்கு, நல்ல பரிசுத்த மனசாட்சி அத்தியந்த அவசியமாகும்.
ஒரு மனிதன் நல்ல மனச்சாட்சிக்கு நேராக தனது வாழ்க்கையை கொண்டு செல்லும்போது மாத்திரமே, அவன் ஒரு நல்ல கிறிஸ்தவனாகின்றான். அதுமாத்திரம் அல்ல, அவன் தனது ஆண்டவருக்கு ஒரு நல்ல சாட்சியாகவும் வாழ்கின்றான். தேவனால் முன்குறிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அவன் சுதந்தரித்தும் கொள்ளுகின்றான். அப்படிப்பட்ட நல் மனச்சாட்சியுடைய கிறிஸ்தவன், தனது முழு வாழ்க்கையையுமே கர்த்தருக்கு கையளித்து, தனது வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும், கர்த்தரிடம் ஆலோசனை கலந்து “ஆண்டவரே, நான் அங்கு செல்லலாமா?” “இந்த காரியத்தில் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?” “நான் அந்த மனிதனோடு எவ்வாறாக பேச வேண்டும்?” இப்படியாக தனது ஒவ்வொரு காரியத்திலும் ஆண்டவரோடு தேவ ஆலோசனை கலந்து நடக்கின்றான். ஆ, அதுவே, நல்மனச்சாட்சியுள்ள ஒரு கிறிஸ்தவனின் அலங்கார ஆவிக்குரிய வாழ்க்கை!
உங்களுடைய மனச்சாட்சியில் ஏதாவது தவறுகள் இருப்பின் அதை இப்பொழுதே ஆண்டவரிடம் அறிக்கையிடுங்கள்! அதை உடனே சரிப்படுத்திக் கொள்ளுங்கள். கறைப்பட்ட துர்மனச்சாட்சியோடு உங்கள் நாளின் வேலைகளைத் துவங்க வேண்டாம். தேவன் உங்களுக்கு மன்னித்து உங்கள் கறைப்பட்ட மனச்சாட்சியை சுத்திகரித்து, உங்களுக்கு ஒரு சுத்தமானதும், பெலமுள்ளதுமான நல் மனச்சாட்சியை கொடுக்க வல்லவராக இருக்கின்றார். இன்றே அவரண்டை வாருங்கள். இயேசுவின் இரத்தம் உங்கள் ‘முந்திய பாவக்கறைகளை’ போக்குவது மாத்திரமல்லாமல், இன்று நீங்கள் தைரியமாய் வாழவேண்டிய ‘சுத்த மனச்சாட்சியும்’ தருவார் என்பதை விசுவாசித்து வாழுங்கள்!