கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
ஒரு கிறிஸ்தவ உயிர்மீட்சி கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, கூட்டத்திற்கு வந்த கிறிஸ்தவ வாலிபர்கள், தாங்கள் வாங்கிவந்த தின்பண்டங்களைத் தின்றவாறே, அருகிலுள்ள கோட்டைச்சுவரில் ஏறிஅமர்ந்து, பொழுதுபோக்கும் களியாட்டு உணர்வோடு கூட்டத்தை நிர்விசாரமாக கவனித்ததை அந்தப் பிரசங்கியார் கண்டார். அந்த உத்தம ஊழியர், இந்த வாலிபர்களின் நிலைகண்டு சொல்லொண்ணா வேதனையும் அடைந்தார்!
ஸ்காட்லாந்து தேசத்தில் உயர்மீட்சி ஏற்பட்ட காலங்களில் அங்குள்ள மக்கள் அழுது கொண்டே தேவனுடைய செய்திகளை கேட்டிருக்கின்றனர்! திரள் கூட்டத்தின் நடுவில் சார்லஸ் பின்னி பேச எழுந்தவுடன் ஜனங்கள் பாவத்தால் குத்துண்டு அழுது மனந்திரும்பினர்! தேவ ஊழியர் ஜான்வெஸ்லி பிரசங்கித்த போது, ஆவியானவரின் ஆளுகையில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரவர் பாவத்திலிருந்து கண்ணீருடன் விடுதலை பெற்றார்கள்! என, திருச்சபை சரித்திரங்களில் நாம் காண்கிறோம். ஆனால், இன்றோ.... தேவபக்திக்குரிய காரியங்கள் முற்றிலும் எதிர்கோணத்தில் பரிதாபகரமாக சென்று கொண்டிருக்கின்றன!
ஜனங்களின் நிர்விசாரமும், அலட்சியமும் ஒருபுறமும் இருக்க, இன்றைய பிரசங்கிமார்களின் நிலையோ இன்னமும் மகா கேடாகவே இருக்கிறது. தங்கள் கூட்டங்களுக்கு ‘எண்ணிக்கை கணக்கில்’ அதிக தொகை இருந்தால் போதும்... அவர்கள் ஆத்தும ஜாக்கிரதை உள்ளவர்களா? இல்லையா? என்பதைக் குறித்து அக்கறைபடுவதே இல்லை. இது போன்ற பிரசங்கிகளே, தங்கள் அந்தரங்க வாழ்க்கையில் உண்மையாய் இருப்பதும் இல்லை! ஜெபஜீவியமும் இருப்ப தில்லை! ஆத்தும தாகமும் கொண்டிருப்பதில்லை! மொத்தத்தில் இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற பொன்னான சுவிசேஷம் அலட்சியமாவதை குறித்து சஞ்சலம் அடையும் தாசர்கள் ஒரு சிலர்தான் உண்டு!
ஓ, வாலிபனே! நீயோ இன்றைய தேய்ந்துவரும் கிறிஸ்தவத்தில் விழித்துக்கொள்! ‘கிறிஸ்தவ வாழ்வில் அசமந்தம்’ தேவன் நியாயந்தீர்ப்பார்..... இனி வரும் நாட்களில் ‘ஏனோதானோ’ என்ற அசமந்தம் உதறி, கர்த்தரின் பாதம் துரிதமாய் வந்து சேர்! கர்த்தர் உன்னை இரட்சிப்பார்!