கிறிஸ்தவ வாலிபர், பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்!
“பெலன் கொண்ட கிறிஸ்தவ வாலிபர்களே” தங்கள் சொந்த வீட்டிற்கும்,
தேவ சபையான அவரது வீட்டிற்கும் “வெட்கம் உண்டாக்காதவர்கள்” (சங்கீதம்.127:5,6).
வாலிபத்தை விழுங்கவரும் “கெர்ச்சிக்கும் சிங்கத்தை” அந்த கொடிய
சாத்தானை.... ஜெயித்து வாழ, சிருஷ்டிகரிடத்தில் சரணடைந்து, சீரும் சிறப்புமான
உன்னத அழகு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கும் செய்திகள்!!
சாவு, பிதாவின் வீட்டுக்கு நம்மை வரவேற்கும் அலங்கார நுழைவாயில்! ஆனால் கல்லறைக்குச் செல்லும் கிறிஸ்து அற்ற கிறிஸ்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அதுபெரும் வேதனையும், வாதிக்கப்படுதலும் ஒழியாத அழிவின் வாசல் (மத்.22:13; மாற்கு 9:48; லூக்கா 16:24; 2 தெச.1:9; வெளி. 20:10).
கடவுளற்ற வாழ்வு வாழ்ந்துவிட்டு, நல்ல சாவை அடைவது என்பது கூடாத காரியமே! சாவுக்குப் பின் மனந்திரும்பும் சாத்தியக்கூறும் மனிதனுக்கு அளிக்கப் படவில்லை. மரித்தவர்களுக்கு ஞானப்பொழிவு கொடுத்தாலும்! மரித்தவர்களுக் காக உறவினர்கள் பாவ விமோசன காணிக்கை கொடுத்தாலும்! மீட்பு பெறுவதற் கான சாத்தியமில்லை என்பதே திருமறைப் போதனை. ஆம், பிந்திய குற்ற உணர்வும், பிந்திய மனந்திரும்புதலும், பிதாவின் மடியை நமக்குத் தேடித் தராது. எனவே, எதிர்பாராமல் எதிர்கொள்ளும் சாவை நீங்கள் சந்திக்க, எப்போதும் ஆயத்தமா? ஆயத்தமானவர்களுக்கு அது ஒரு மயிர்கூச்சரிக்கும் அற்புத நிகழ்வு! அதற்கு தயாராக நிற்பவர்களே ஞானவான்கள்! எனவே, இந்த நாள் என் வாழ்வின் இறுதி நாளாய் இருக்கக்கூடும்! என எண்ணியே வாழ்ந்திடக்கடவோம்!
இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், கிறிஸ்துவுக்குள் மரிப்பவர்கள் அனுப விக்கும் உயிர்ப்புக்கு ஓர் திருஷ்டாந்தம்! அது ஒவ்வாத ஒரு வீண் கற்பனைச் செய்தி அல்லவே அல்ல! எனவே, உலகை ஆதாயம் செய்து, ஆத்துமாவை நஷ்டப்படுத்திக் கொள்ளாதிருப்போமாக. நித்தியத்தின் வாழ்வை முன் வைத்து நிகழ்காலத்தை சீரமைத்துக் கொள்வோமாக! இந்த நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது. வாழ்வில் எதிர்கொள்ளும் எல்லாவித போராட்டத்திலும் வெற்றி காண, அவைகளைத் தாக்குப்பிடிக்கும் திறனை இந்த நம்பிக்கையே கூட்டி வழங்கும்! மாலைப்பொழுதில் பள்ளியை விட்டு வீடு திரும்ப ஆவலாய் காத்திருக்கும் பள்ளி சிறாரின் ஆசையைப் போன்ற எதிர்நோக்காகவே, பரிசுத்த வான்களின் மரணம் இருக்கும்! இந்த பாக்கியம் இரட்சிப்படைந்து, அந்த இரட்சிப்பை காத்துக் கொண்டவர்களுக்கு மாத்திரமே உண்டு!