கணவனை தலையாகக் கொண்ட குடும்பம் இல்லாமல்,
கிறிஸ்துவை தலையாகக் கொண்ட சபை இல்லை!
குடும்பம் கட்டப்படும் தேவையே முதல் தேவை.... என்பதை
இன்றைய கிறிஸ்தவம் அறியவில்லை! எனவேதான் குடும்பத்தில்
கோபம், பகை, பிரிவினை நிகழ்கின்றன!
குடும்பம் கட்டப்படாமல், குடும்பத்த
21.09.2024
1. இனிய குடும்பத்திற்கு ‘தெய்வ பயமே’ மூலதாரம்!
“கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன்....” என்ற 128-ம் சங்கீதத்தின் முதலாம் வசனமே, நம் தெய்வீக குடும்பத்திற்கு ஆதாரமாயிருக்கிறது! ஒரு தனி நபராகவே இந்த வசனம் ‘கர்த்தருக்கு பயப்படுகிறவன்’ என்ற ஒருமையில் துவங்குகிறது! திருமணத்திற்கு முன்பே, இரட்சிக்கப்பட்டு தெய்வ பயத்துடன் தன் சுய வழிகளில் நடவாமல் “கர்த்தருடைய வழியில்” நடக்கிறவன், தன் பிரயாசம் அனைத்திலும் பலனை கண்டு, தேவனுக்கு புகழ்ச்சியாய் வாழ்வான்! (வச.2). ஆகவே ஒரு வாலிபன், வரப்போகும் தன் குடும்பத்திற்காக, தெய்வ பயத்துடன் பொறுப்புள்ள ஜீவியம் செய்ய வேண்டும்.
தெய்வ பயம் நிறைந்த இந்த தனி நபர், 3-ம் வசனத்தில் தன்னைப் போன்ற இரட்சிக்கப்பட்ட தெய்வ பயம் கொண்ட ‘மனைவியை’ கண்டடைந்து அவளும், தன் கணவனைப் போலவே கர்த்தருக்கென்று கனிதரும் வாழ்வை வாழ்கிறாள். அடுத்ததாக, அதே வசனத்தில், அவர்களின் பிள்ளைகளும் “நல்ல ஆரோக்கியமான பக்தியுள்ளவர்களாய்” ஒலிவமர இளம் கன்றுகளாய் வளருவார்கள்!
இவ்வித இனிய குடும்பம், “கர்த்தரின் ஆசீர்வாதமே” தங்கள் பங்காய் பெற்றிருப்பார்கள்! என 4,5-ம் வசனம் திட்டமாய் கூறுகிறது. கோணலும் மாறுபாடான இன்றுள்ள சந்ததிபோல் “பணத்தை” ஆசீர்வாதமாய் வைத்திடாமல், “கர்த்தருடைய ஆசீர்வாதத்தையே” ஐசுவரியமாய் கொண்டு ‘தேவனை மையப்படுத்தி’ வாழும் குடும்பமாய்...... சந்ததிசந்ததியாய், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளும் சமாதானத்துடன் வாழ்வார்கள்!
இந்த 6-வசனங்கள் கூறிடும் இனிய வாழ்க்கையைப் பாருங்கள்! “பாக்கிய வாழ்வு! நன்மையான வாழ்க்கை! பிரயாசத்திற்குரிய பலன்! மனைவியை கண்டடைதல்! கனியுள்ள ஜீவியம்! பிள்ளை பாக்கியம்! கர்த்தருடைய ஆசீர்வாதம்! பிள்ளைகளின் பிள்ளைகளை காணும் நீடித்த சந்ததி! பூரண சமாதான வாழ்க்கை” .......இவை அனைத்தையும் நமக்கு வாக்களித்த இந்த சங்கீதம்.128:1-6 வசனங்களின் மூல - ஆதாரமாய் இருப்பதெல்லாம் “கர்த்தருக்கு பயந்து வாழும் வாழ்க்கை!” என்பதை நாம் மனதில் கொள்ளக்கடவோம்.
ஓர் ‘பக்தியான குடும்பமாய்’ வாழ்ந்திட, சனிக்கிழமைதோறும் வெளியாகும் இந்த வலைதள செய்திகள் உங்களை நடத்தி ஆசீர்வதிப்பதாக! ஆமென்.
- ரத்னம்